பாக். பிடியிலிருந்த போது மனைவியுடன் பேசிய அபிநந்தன்

Published On:

| By Balaji

பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் இருந்த போது தனது மனைவிக்கு போன் செய்ததாகவும், அப்போது அவரது மனைவி, ‘நான் போடும் டீயை விட, அவர்கள் கொடுத்த டீ நன்றாக இருந்ததா’ என கேட்டதாகவும் தி பிரிண்ட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப் படை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் எஃப் 16 விமானத்தை, மிக் 21 பைசன் போர் விமானம் மூலம் விரட்டி அடித்த போது, இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கி கொண்டார். பாகிஸ்தான் பிடியில் அவர் இருந்தபோது. டீ குடிப்பது போன்ற வீடியோ காட்சியும், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை நன்கு பார்த்துக் கொண்டதாக அபிநந்தன் கூறுவது போன்ற வீடியோ காட்சியையும் பாகிஸ்தான் வெளியிட்டது. ஆனால் அவர் மனதளவில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது.

பின்னர் இந்தியா வந்த அவர் மருத்துவ சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு மீண்டும் விமானப் படைத் தளத்திற்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாக் பிடியிலிருந்த போது அபிநந்தன் தன் மனைவியிடம் போனில் பேசியதாக தி பிரிண்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் அபிநந்தன் இருக்கும் போது அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது செல்போனை அபிநந்தனிடம் கொடுத்து அவரது மனைவிக்கு போன் செய்யச் சொல்லியுள்ளார். இதையடுத்து அபிநந்தன் மனைவி தன்விக்கு போன் செய்துள்ளதாக தி பிரிண்ட் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட்டும், அபிநந்தனின் மனைவியுமான தன்வி, அபிநந்தனிடம் இருந்து போன் வந்ததும், முதலில் தனது கணவர்தான் என்று உறுதி செய்த பின்னர் எந்த பதட்டமும் இல்லாமல் பேசியிருக்கிறார்.

**அவர்கள் பேசிய உரையாடல்**

தன்வி : நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று குழந்தைகள் கேட்டால் என்ன சொல்வது?

அபிநந்தன்: நான் சிறையில் இருக்கிறேன் என்று சொல்

தன்வி: அவர்கள் கொடுத்த டீ எப்படி இருந்தது.

அபிநந்தன் : நன்றாக இருந்தது.

தன்வி: நான் போடும் டீயை விடவா?

அபிநந்தன்: ஆமாம் நன்றாக இருந்தது. (சிரித்துக்கொண்டே)

தன்வி: அப்படியென்றால் அதன் செய்முறையை கற்று வாருங்கள்.

இவ்வாறு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share