பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் நீண்டகாலமாக முயற்சி எடுக்காமல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற எஃப்.ஐ.சி.சி.ஐ கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நாம் நிறைய முயற்சி எடுத்துவிட்டோம். நிறைய ஆதாரங்களையும், ஆவணங்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கிவிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் உலகம் முழுவதும் பயணித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறார்.
ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கும், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசார் போன்றவர்களுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதால் உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு முயற்சித்து வருகிறது. தொடர் கோரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பிறகும் பாகிஸ்தான் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதை தடுக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சியே எடுப்பதில்லை. மேலும், பயங்கரவாதிகள் பயிற்சி எடுக்கும் நாடாக இன்றளவிலும் பாகிஸ்தான் உள்ளது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மையப் பகுதியை தாக்க நாங்கள் முடிவெடுத்தோம். அதற்கு போதிய உளவுத் துறை தகவலும் எங்களிடம் இருந்தது. ஆக, பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடியை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அதை பாகிஸ்தான் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை. நீங்கள் செயல்படவில்லை. அதனால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்” என்று தெரிவித்தார்.�,