காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் திடீரென நேற்று இரவு அம்மாநில ஆளுநரால் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், “பாகிஸ்தானின் தூண்டுதலின் பெயரில்தான் இக்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரின” என்று பகிரங்க புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜகவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து அதை நிரூபிக்குமாறு சவால் விட்டார். இதையடுத்து பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி தான் கூறிய கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இன்று (நவம்பர் 22) அறிவித்து பின்வாங்கியிருக்கிறார் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்.
காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக் கட்சியும், ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியும் களத்தில் எதிரெதிராக நின்றவை. இவ்விரு கட்சிகளும் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைக்கத் திட்டமிட்டன. இதுகுறித்து முன்னாள் முதல்வரும் மஜக தலைவருமான மெகபூபா நேற்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் உரிமை கோரி ஃபேக்ஸ் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதம் ஃபேக்ஸ் மெஷின் பழுதானதால் ஆளுநரை போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில்தான் ஆளுநர் காஷ்மீர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தார்.
ஆளுநரின் செயல்பாட்டை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்த பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், ”கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலை, ‘எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து’ வந்த அறிவுரையின்படி மஜகவும்,தேசிய மாநாட்டுக் கட்சியும் புறக்கணித்தன. இப்போது அதே எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து வந்த புதிய அறிவுரையின்படி இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன” என்று ஏ.என்.ஐ. ஊடகத்தின் மூலம் கருத்து தெரிவித்திருந்தார். எல்லைக்கு அப்பால் என்றால் காஷ்மீரைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தான் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும். எனவே ராம் மாதவ்வின் இந்தக் கருத்து காஷ்மீர் அரசியலில் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது.
ராம் மாதவ்வுக்கு தனது ட்விட்டர் பதிவில் கடுமையான பதிலடி கொடுத்த ஓமர் அப்துல்லா, “ராம்மாதவ் அவர்களே. உங்களது அரசிடம்தான் எல்லா புலனாய்வு அமைப்புகளும் உள்ளன. சிபிஐயும் உங்கள் கூண்டுக் கிளியாகத்தான் உள்ளது. எனவே உரிய முறையில் விசாரணை நடத்தி உங்கள் புகாருக்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும்.இல்லையென்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுபோன்ற மலின அரசியலில் ஈடுபடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு தனது ட்விட்டர் பதிவில் பதில் தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், “நீங்கள் மறுக்கும் பட்சத்தில் எனது கருத்தை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பல்டியடித்தார். அதுமட்டுமல்ல, அதே ட்விட்டர் பதிவில் இன்னும் சில படிகள் கீழிறங்கி இன்னும் மலினமான பாலின அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் ராம் மாதவ்.
“நான் என் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே இருப்பது நேர்மையான காதலா என்பதை நீங்கள் ( ஓமர் அப்துல்லா) நிரூபிக்க வேண்டும். அதற்கு வரும் தேர்தலில் நீங்கள் இருவரும் இணைந்து நிற்க வேண்டும். கவனத்தில் கொள்ளுங்கள் இது தேர்தல் கமென் ட்தான், பர்சனல் கமென்ட் அல்ல” என்று தெரிவித்து தன் தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்.
�,”