பாகிஸ்தான்: அரசு ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது!

Published On:

| By Balaji

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இனி தணிக்கை கிடையாது என்றும், முழு சுதந்திரம் அவற்றுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார் அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன்.

கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 18) பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான். இதனையொட்டி நடந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, வாசிம் அக்ரம் உட்படப் பலர் பங்கேற்றனர்.

இம்ரான் அமைச்சரவையில் தகவல் துறை அமைச்சராக இருந்துவரும் சவுத்ரி பவாத் ஹுசைன் நேற்று (ஆகஸ்ட் 21) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதில், பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் அரசு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட அரசியல் தணிக்கை முறை விலக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் மூலமாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் வானொலி பாகிஸ்தான் ஆகிய ஊடகங்கள் தணிக்கை ஏதுமின்றி சுதந்திரமாகத் தங்களது படைப்புகளை வெளியிட முடியும்.

பாகிஸ்தானின் வளர்ச்சி, பிரதமர் இம்ரான் கானின் தொலைநோக்குப் பார்வைகளுள் ஒன்று என அவர் தெரிவித்தார். “இன்னும் மூன்று மாதங்களில், தகவல் துறையில் அபாரமான மாற்றங்களைப் பார்க்கப் போகிறோம். உலகளவில் பாகிஸ்தான் பற்றிய நேர்மறையான பிம்பத்தை வளர்த்தெடுப்பதில், அரசு ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். தங்களது நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்” என்று அரசின் சார்பாக இயங்கும் ஊடகங்களுக்கு பவாத் ஹுசைன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share