தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்குத் துணை போவதாக அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்துவருகிறது. ஆப்கான், தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்துகின்றன என்றும் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ இந்தக் குழுக்களுக்கு புகலிடம் வழங்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அமெரிக்காவிடமிருந்து ஏராளமான டாலர்களை நிதியாகப் பெற்று பாகிஸ்தான் ஏமாற்றிவருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
அணு ஆயுத வியாபாரத்துடன் தொடர்புள்ளதாகக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில் தெற்காசிய மூலோபாயத்துக்கு ஆதரவாக பாகிஸ்தானின் தீர்க்கமான செயல்கள் இல்லாததால் 300 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) அனுமதித்தால் அவசரத் தேவைகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்துவோம் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் லெப்டினல் கர்னல் கோன் ஃபால்க்னர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே பாகிஸ்தானுக்கான அனைத்துப் பாதுகாப்பு உதவிகளையும் நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.�,