பவுலர்களுக்குச் சற்றும் சளைக்காத பேட்ஸ்மேன்கள்!

Published On:

| By Balaji

326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, இந்தியா முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளை முதல் பகுதியிலேயே தொடங்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. முதல் டெஸ்ட் மேட்சுடன் ஒப்பிடுகையில் இது நல்ல ஸ்கோர். இதனை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி இருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் போராடிய அளவுக்கு, பவுலர்கள் கஷ்டப்படவில்லை. எனவே, இரண்டாவது நாளில் அவர்களது விக்கெட்டை எடுப்பதற்கு இந்திய பவுலர்கள் மிகுந்த சிரமப்படவில்லை.

பேட் கம்மின்ஸ், டிம் பெய்ன் ஆகியோரின் 69 ரன் கூட்டணியை உமேஷ் யாதவ் உடைத்ததில் தொடங்கியது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் மழை. இன்-ஸ்விங்கர் பந்தினை எதிர்பார்த்து விளையாடிய கம்மின்ஸுக்கு, யாதவ் கொடுத்த பரிசு நேரான பந்து. எனவே, அவுட் ஸைட் எட்ஜ் ஆன பந்து நேராக ஸ்டம்பைப் பிளந்துகொண்டு சென்றது. கம்மின்ஸின் விக்கெட்டைத் தொடர்ந்த சில ஓவர்களில் பெய்னின் விக்கெட்டை பும்ரா எடுத்தார்.

எல்.பி.டபிள்யூ விக்கெட்டாக அம்பயர் கிறிஸ் கஃபானே கொடுத்த உத்தரவை, பெய்ன் எதிர்த்து ரிவ்யூவுக்குச் சென்றார். ஆனால், நடுவரின் முடிவு சரியானது என பெவிலியனுக்கு மேலிருந்து செய்தி வர, பெய்ன் நடையைக் கட்டினார்.

முதல் டெஸ்டில் வீழ்த்தியது போலவே, ஸ்டார்க்கின் விக்கெட்டை இஷாந்த் ஷர்மா எளிதாக எடுத்தார். ஃபுல்லர் லெங்த் பந்தினை அடிக்க எந்த பேட்ஸ்மேனுக்குத்தான் ஆசை வராது. ஆனால், அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்குக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாது. காட்டுத்தனமாக மட்டையை வீசும் ஸ்டார்க்குக்குக் கொடுங்கனவாக மாறிப்போனது அந்தப் பந்து. கடைசி விக்கெட்டாகக் களமிறங்கிய ஹேசில்வுட் ஒரு பந்தினை மட்டுமே தொட்டார். அதையும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் எகிறி கேட்ச் பிடித்துவிட்டார். எனவே, 326 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை மூட்டை கட்டியது ஆஸ்திரேலியா.

இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார்கள். முரளி விஜய் ஒரு ரன்கூட எடுக்காமல், பந்தினைத் தவறாகக் கணித்து ஆட்டமிழந்தார். விஜயைப் போலவே, பந்தின் வேகத்தை சரியாகக் கணிக்காமல் ராகுலும் ஐந்தாவது ஓவரில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்ததால், சத்தேஸ்வர் புஜாராவுடன் விராட் கோலி இணைய வேண்டியதானது.

தங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பினை உணர்ந்து புஜாரா-கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அவ்வப்போது பவுண்டரிக்களை அடிப்பதும், பொறுமையாக ரன்களைச் சேர்ப்பதும் என கவனமாக ஆடிவருகின்றனர் இருவரும். தேனீர் இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகளுக்கு 70 ரன்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share