பள்ளிகள், தியேட்டருக்கு விடுமுறை: வலியுறுத்தும் மார்க்சிஸ்ட்!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62ஆக உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு குணமாகிவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று (மார்ச் 11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “மிக எளிதில் பரவும் தன்மை கொண்ட கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பன்முகத்தன்மையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

நோய் கண்டறிவதற்கான சோதனைகளில் ஒருவருடைய சளி மற்றும் ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை பரிசோதிப்பதற்கான வசதி தற்போது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மட்டுமே உள்ளது எனவே நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களை உடனடியாக மாநிலத்தின் பரவலான இடங்களில், வாய்ப்பிருந்தால் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவிலேனும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நோய் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களும் மாநிலத்தின் பல இடங்களில் ஊரகப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும், கொரோனா நோய் வந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்க தேவைப்படும் ”வென்டிலேட்டர்”களை தேவையான அளவில் தயார் நிலையில் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பாலகிருஷ்ணன், கொரோனா வைரஸ் நோயால், முகத்தில் அணியும் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கூடுதல் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே முகக் கவசங்கள் குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் பிரதானமாக கூடுகிற இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியாக நோய்த் தடுப்பு மருந்துகளை தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும்,

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை தீரும் வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மற்றும் கேளிக்கை மற்றும் விளையாட்டு மைதானங்கள் (ஐபில் உட்பட), அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும், குறிப்பாக 5ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளி ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து விடுமுறை அளிப்பது குறித்தும் தமிழக அரசு உரியமுறையில் ஆலோசிக்க வேண்டும்” என்றும் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share