பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர் சங்கம் போராட்டம்!

Published On:

| By Balaji

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாகக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதி மற்றும் பாதுகாப்பு இல்லை என்றும், தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இது தவிர மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் இவற்றைக் கண்டித்து ‘கல்வி என்பது விற்பனைக்காக அல்ல’ என்ற பதாகைகளுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று (ஜூன் 13) சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ”தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை, கட்டுப்படுத்த 2009ல் தமிழக அரசு கோவிந்த ராஜன் கமிட்டியை அமைத்தது. அதைத்தொடர்ந்து கவிராஜ பாண்டியன், சிங்காரவேலு என கமிட்டியின் தலைவர்கள் மாறி வந்தாலும் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை மட்டும் குறைந்த பாடில்லை” என்று போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி கூறுகையில், தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்த நீதிபதி, மாசிலாமணி கமிட்டி அமைக்கப்பட்டது. கல்விக் கட்டணத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒருசில பள்ளிகளுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே ஜூன் 15ஆம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

25 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களைக் கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

மதுரை, தஞ்சை முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி, நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share