கன்னியாகுமரியில் நூறாண்டு பழைமையான திக்குறிச்சி மகாதேவர் கோயிலில், நேற்று (செப்டம்பர் 1) பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களில் ஒன்று, திக்குறிச்சி மகாதேவர் கோயில். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வழக்கம்போல பூஜைகள் முடிந்து, நேற்று முன்தினம் இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்று காலை கோயில் நடையைத் திறக்க வந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி, கோயிலின் முன்பக்கம் மற்றும் உள்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மூலவர் சன்னிதானம், நகைகள் பாதுகாப்பு அறைகள் உடைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த பழைமையான ஐம்பொன் சிவன் சிலைகளும், 4 கிலோ எடையுள்ள ஐம்பொன் முருகன் சிலை, 4 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை மற்றும் செம்பினால் ஆன நந்தி சிலைகளும் கொள்ளை போனது தெரியவந்தது.
தங்க மாலைகள், ருத்ராட்சம், பொட்டு, செம்பு, வெள்ளி திருமுகம், ஆராட்டுக்கு பயன்படும் வெள்ளிக் குடை, உண்டியல் பணம் உட்படப் பல கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. கொள்ளை போன நகைகள் அனைத்தும் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
கொள்ளை குறித்து கோயில் நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் போலீஸாருக்குக் கொடுத்த தகவலின் பெயரில், மோப்ப நாய் உதவியுடன் தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் போலீஸார் ஆய்வு நடத்தினர். கோயில் பூசாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும், போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை குறித்து தவலறிந்த பக்தர்கள், சம்பவ இடத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தினர்.�,”