தமிழகத்தில் நடந்த மக்களவை, மினி சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்த நிலையில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஓர் கருத்துக் கணிப்பை வெளியிட்டோம்.
’மின்னம்பலம் –மக்கள் மனம்- ஒரு சோறு பதம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த கருத்துக் கணிப்பில் தர்மபுரி தொகுதியை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டோம்.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நேற்று பல வாசகர்கள் மின்னம்பலத்தைத் தொடர்புகொண்டு, ‘உங்களின் ஒரு சோறு பதம் உண்மையிலேயே தமிழக தேர்தல் நிலவரத்தை துல்லியமாகக் கணக்கிட்டது’ என்று பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்கள்.
தர்மபுரியை மட்டும் நாம் தேர்ந்தெடுத்தது ஏன்?
“2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மமக, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, தேமுதிக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அப்போது தனித்து நின்ற அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தர்மபுரியிலும் வென்றன. தர்மபுரியில் பாமகவின் அன்புமணி வெற்றிபெற்றார். அதிமுக இரண்டாம் இடமும், திமுக மூன்றாம் இடமும் பெற்றன.
2014 தேர்தலில் 37 தொகுதிகளில் வென்ற அதிமுகவும், தர்மபுரியில் தேஜகூ சார்பாக வென்ற பாமகவும் (தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனேக கட்சிகளும்) இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்ற நிலையில் திமுக எதிர்த்து நிற்கிறது. தர்மபுரி தொகுதியில் தட்பவெப்பத்தை உணர்ந்தால் அது தமிழ்நாடு முழுமைக்குமான தாக்கத்தின் பிரதியாக இருக்கிறது என்ற காரணத்தாலேயே நாம் தர்மபுரியை தேர்ந்தெடுத்தோம்” என்று அந்த செய்தியிலேயே குறிப்பிட்டிருந்தோம்.
அந்த அடிப்படையில் மின்னம்பலம் கருத்துக் கணிப்பில்,
தொகுதி முழுக்க வலம் வந்ததில் புதிய வாக்காளர்கள் பெரும்பாலானோர் மத்திய ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
வியாபாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் போன்றோரும் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து போன்றவை மிடில் கிளாஸ் மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துள்ளன. ஆளுங்கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றிபெற முடியாது என்று நம்மிடம் பேசிய வறுமைக்கோட்டுக் கீழே உள்ள மக்களே நம்மிடம் கூறினர்.
அது தேர்தல் முடிவுகளில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை மின்னம்பலம் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறோம்.
�,