உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் வீடு முன்பாக உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் மரணமடைந்தார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடலில் 18 காயங்கள் இருந்ததாகவும், செப்டிகேமியாவால் (ரத்தம் மூலம் தொற்று பரவுதல்) காரணமாக அவர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது குல்தீப் சிங் சிதாபூர் சிறையில் உள்ளார்.
சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ கடந்த ஜூலை 7ஆம் தேதி ரோஷாநுதவ்லா சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், குல்தீப் சிங்கின் சகோதரர் அதுல்சிங் உட்பட ஐந்து பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குல்தீப் சிங்கின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாவிட்டாலும், அவருக்கும் சிறுமியின் தந்தை மரணத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிஐ நேற்று (ஜூலை 11) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பங்கர்மாவ் தொகுதியின் எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்கர் மீது சட்டப்பிரிவு 363, 366, 376 மற்றும் 506 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.�,