பருவ நிலை மாற்றத்தால் பரம்பரைத் தொழிலைத் துறக்கும் மீனவர்கள்!

Published On:

| By Balaji

ஜென்ஸி சாமுவேல்

கஜா புயலின்போது தங்கள் ஊர் மக்களுக்கு உணவு தயாரிப்பதிலும், பிற பாதுகாப்பு வசதிகள் செய்வதிலும் உதவி செய்து கொண்டிருந்த மதிமுருகனும் (34), மணிகண்டனும் (24), ஊர் சகஜ நிலைக்குத் திரும்பும் முன், தங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற தவிப்பில் இருந்தார்கள். வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பியிருந்தாலும், மீண்டும் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும் மீன்பிடித் தொழிலில் ஆர்வமும் இல்லை, தொழில் பரிச்சயமும் இல்லை.

‘நாலு காசு சம்பாதிச்சாலும் வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்று நினைப்பவர்களே ஆற்காட்டுத்துறை ஊரில் அதிகம். வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள இளைஞர்களும் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், ஆற்காட்டுத்துறையில் இருந்துதான் பெரும்பான்மையான இளைஞர்கள் வெளிநாடு செல்கிறார்கள்.

மொத்த மக்கள்தொகையே 2,592ஆக இருக்கும் ஊரில் 300க்கும் மேற்பட்டவர்கள் அரபு நாடுகளிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் கட்டடத் துறை, எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்களில் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள்.

மீனவக் கிராமங்களிலிருந்து வெளிநாடு செல்வது புது விஷயமில்லை. மணிகண்டனின் தாத்தா வெளிநாட்டில் வேலை செய்தார். ஆனால், மிக அதிகமாக இளைஞர்கள் செல்வது கடந்த 15 ஆண்டுகளாகத்தான் என்கிறார்கள் மீனவர்கள்.

மதிமுருகனின் தந்தை ஒரு படகு விபத்தில் கடலில் இறந்ததால் மூன்று சகோதரிகள் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அதிக அபாயம் நிறைந்த மீனவத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று முடிவு எடுத்ததாகக் கூறுகிறார்.

முன்பு கடலில் விபத்துகள் நடந்தாலும், இப்போது இருக்கும் அளவு அதிகம் இல்லை என்கிறார்கள் மீனவர்கள். முன்பு அனுபவ அறிவாகக் கற்றுத்தெரிந்த நுணுக்கங்கள் இப்போது பயன்படுவதில்லை என்கிறார்கள். காற்று அடிக்கும் விதம், கடல் நீரோட்டம் ஆகியவற்றைப் பார்த்து முன்பு கடலுக்கு மீன் பிடிக்கப் போகலாமா என்றும், எங்கு மீன் அதிகம் கிடைக்கும் என்று கணிக்க முடிந்ததாகவும், இப்போது அப்படி கணிக்க முடிவதில்லை என்றும் கூறுகிறார்கள்.

2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமிக்குப் பிறகுதான் கடல் நீரோட்டங்களிலும், அலை உயரத்திலும் அதிக மாற்றம் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். 25 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்யும் ராஜேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். கடலின் தன்மையைக் கணிக்க முடியாததற்குப் பருவநிலை மாற்றம் ஒரு காரணம் என்கிறார் கடல் வளங்கள் குன்றாமல் மேலாண்மை செய்வதற்காக இயங்கும் ஃபிஷ்மார்க் (FishMarc) என்ற அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன்.

‘இங்க முனை மாண்டு போச்சு’ என்று மாணிக்கம் (75) என்ற பெரியவர் சொன்னதற்கு, ‘முன்பு எங்க ஊர்ல இருந்து பாத்தா கோடியக்கரை கடற்கரை முனை கடலுக்குள்ள நீட்டின மாதிரி தெரியும், இப்போ தெரிகிறதில்ல’ என்று ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.

1984 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளின் செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், கோடியக்கரையின் கடற்கரைப் பகுதி சிறிது மட்டமாக இருப்பது தெரிகிறது. அந்தப் பகுதி மட்டமாகி சுமார் 20 ஆண்டுகள் இருக்கும் என்கிறார் ராஜேந்திரன்.

கடலில் மீனவர்களுக்கு ஆபத்து; கரையில் அவர்கள் குடும்பத்திற்கு ஆபத்து என்கிறார் மதிமுருகன். கடலுக்கும் ஊருக்கும் உள்ள தூரம் குறைந்து விட்டது. மேலும் மணல் பரப்பில் இயற்கை அரண்களாக இருந்த குண்டு முள் செடி, சவுக்கு மரங்கள் சுனாமியின்போது அழிந்துவிட்டன. இதனால் கடல் நீர் எளிதாக ஊருக்குள் புகுந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்கிறார்.

அதிகரிக்கும் ஆபத்துகள் ஒருபுறம் என்றால், குறைந்துவரும் கடல்வளம் இளைஞர்கள் தொழிலைத் துறப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. கூரல், உளுவை, பூவாளி, நாங்கல் போன்ற மீன் வகைகள் இப்போது கிடைப்பதில்லை என்கிறார்கள் மீனவர்கள். முன்பு இந்தக் கடல் பகுதியில் மீன்களை உண்ணும் பெரிய வகை மீன்கள் அதிகம் இருந்ததாகவும், இப்போது கடற்பரப்பில் வாழும் மீன் இனங்கள் அதிகம் கிடைப்பதாகவும் மத்திய கடல்வள ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஜோ கிழக்கூடன் தெரிவிக்கிறார். மாறிவரும் கடலின் தன்மையின் ஒரு விளைவுதான் இது என்கிறார் கடல் சூழலியலில் கவனம் செலுத்தும் ஓய்வு பெற்ற விலங்கியல் பேராசிரியர் வறீதையா கான்ஸ்டாடின். சில மீன் இனங்கள் அழிந்து போகும், சில இனங்கள் செழிக்கும் என்கிறார்.

வெளிநாட்டில் தொழிலாளிகளாக இந்த கிராமத்து இளைஞர்கள் சம்பாதிப்பதற்கும், மீன்பிடித் தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மீன்பிடிப் படகில் உதவியாளராகப் பணிபுரியும் மணிகண்டனின் தந்தை மாதத்திற்கு ரூ.12,000 சம்பாதிக்கிறார். மணிகண்டன் ஊருக்குத் திரும்பி வரும் முன் ரூ.20,000 சம்பாதித்து, வீட்டுக்கு ரூ.14,000 அனுப்பினார். தங்களின் வேலை குறித்த கஷ்டமான சூழலை தங்கள் குடும்பத்துக்குத் தெரிவிப்பதில்லை என்கிறார் மணிகண்டன். பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை கவுரவமாக நினைப்பதே இதற்குக் காரணம்.

இந்தப் போக்கை மாற்றி, இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளிகளாக வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுக்க, கடல்வளம், மீன் வளர்ப்பு சார்ந்த பிற தொழில்களை சென்னைக்கு அருகில் உள்ள கடற்கரை கிராமங்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகிறார் ஜோ கிழக்கூடன். இதேபோல் பிற கடற்கரைப் பகுதிகளிலும் அறிமுகம் செய்தால், இளைஞர்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்வதைத் தவிர்க்கலாம்.

பல இளைஞர்கள் வெளிநாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கப்பல்களில் வேலை செய்கிறார்கள். இதனால் இவர்கள் ஊருக்குத் திரும்பியதும் மீண்டும் தங்கள் தொழிலைத் தொடருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது மற்றோர் ஆறுதலான விஷயம்.

**கட்டுரையாளர் குறிப்பு**

கட்டடப் பொறியாளரான ஜென்ஸி சாமுவேல், நிறுவன வரம்புகளுக்குள் சிக்கிக்கொள்ளாத சுதந்திரப் பத்திரிகையாளர். நாட்டு நடப்புகள், சமூகம், சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றம், வேளாண்மை குறித்து எழுதி வருகிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share