மாணவர்கள் தேர்வு குறித்து கவலைபட வேண்டாம், அது கொண்டாடப்படவேண்டிய காலம் என பிரதமர் மோடி வானொலி உரையில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். அதன்படி அவர் இன்று 28-வது முறையாக உரையாற்றினார். அப்போது கூறியதாவது:-
குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த நமது வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை ‘காந்தி நினைவு நாளை முன்னிட்டு, ஜனவரி 30ம் காலை11 மணியளில், மகாத்மா காந்தி மற்றும் மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக வருடந்தோறும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இது நமது ஒற்றுமையை காட்டுவதுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றுவது போல் ஆகும். நமது நாடு ராணுவ வீரர்கள், பாதுகாப்புபடையினருக்கு சிறப்பு மரியாதை அளித்து வருகிறது .காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் போற்ற வேண்டும். இளைஞர்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். இந்திய கடலோர காவல்படை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதியுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டுக்காக சேவை செய்த கடலோர காவல்படை வீரர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம், மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை. தேர்வின் போது அனைவரும் குழுவாக செயல்பட வேண்டும். பதற்றமின்றி இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். சிறிது நேரம் ஓய்வெடுப்பது நினைவாற்றலுக்கு சிறந்த மருந்தாகும். இது எனது சொந்த அனுபவம். அனைத்து அறிவும், விஷயமும் உங்களுடன் உள்ளது.
யாருடனும் போட்டி போடாதீர்கள். நீங்கள் கற்றறிந்ததை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கு, தேர்வு சிறிதளவு உதவுகிறது.தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர் கொள்ள வேண்டும். மகிழ்வோடு தேர்வை எழுதுங்கள். உங்களுக்கு நீங்களே போட்டி. சச்சின் டெண்டுல்கர் அப்படிதான் தனது சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.
வாழ்க்கையில் இடையூறுகள் வரதான் செய்யும். அப்துல்கலாம் அதுபோன்ற தடைகளை எல்லாம் எதிர் கொண்டதால்தான் வெற்றி பெற முடிந்தது. அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது. நேற்றை விட இன்று சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.�,