லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும், மும்பை கொடூரத் தாக்குதல்களுக்குக் காரணமானவருமான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.
2008 நவம்பர் 26ஆம் தேதியன்று மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனத்தின் தலைவனான ஹபீஸ் சயீத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தடை செய்யப்பட்ட நபராக அறிவித்தது.
சயீத் மீது பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் பல பயங்கரவாத வழக்குகள் இருந்தபோதும், அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும், இந்தியாவுக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார். .
சர்வதேச அழுத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி தொடர்பான பல குற்றங்கள் சுமத்தப்பட்டன.
2017ஆம் ஆண்டில், ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நான்கு உதவியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் பஞ்சாபின் நீதித் துறை மறு ஆய்வு வாரியம் தங்களது சிறை வாசத்தை மேலும் நீட்டிக்க மறுத்தபோது கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்தான் இப்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசாங்கத்தின் வழக்கறிஞரான அப்துர் ரவூப் தீர்ப்பை உறுதிப்படுத்தினார், மேலும் சயீத்தின் கூட்டாளியான ஜாபர் இக்பாலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதே காலத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொண்டு நிறுவனமான ஜமாத்-உத்-தாவாவுக்கும் தலைமை தாங்கியது சயீத் தான். பயங்கரவாதம் மற்றும் குற்றவியல் நிதிச் சட்டங்களை கண்காணிக்கும் சர்வதேச அரசு கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) ஒரு முக்கிய கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்ட்டில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதைத் தவிர்ப்பதற்காகத்தான் பாகிஸ்தான் நீதிமன்றம் ஹபீஸ் சயீத்தை தண்டித்திருக்கிறது என்று சர்வசதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் சர்வதேசப் பொருளாதாரத்தின் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டால், உலக வங்கியிலிருந்து அந்நாடு தனிமைப்படுத்தப்படும். இந்த நிலையில்தான் 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் சயீதுக்கு முதன்முறையாக தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீதான மீதமுள்ள நான்கு பயங்கரவாத நிதி வழக்குகளில் தீர்ப்புகள் இந்த வார இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் அரசால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சயீத் இந்த தண்டனைக்குப் பின் சிறைக்கு மாற்றப்படுகிறார்.�,