நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கோவை, திருவள்ளூர் பகுதியிலிருந்து தேனிக்கு காலி வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றிக்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு காரணம் மோடிதான் என்று தெரிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “தேனி தொகுதியில் என்னுடைய தோல்வி மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வியல்ல, அது உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகார பலமும், பண பலமும் சேர்ந்து நான் வெற்றிபெறமுடியாமல் செய்துவிட்டன. இவ்வளவையும் மீறி எனக்கு தேனியிலுள்ள நான்கரை லட்சம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவத்தைக் கொடுத்து, அங்கு தங்களது தில்லுமுல்லுவை செய்திருக்கிறார்கள். அதற்கான சில ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. கோவை, திருவள்ளூரிலிருந்து தேனிக்கு 100 வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பியது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கத்தை தேர்தல் ஆணையம் இதுவரை சொல்லவில்லை. மேலும் தேனி தொகுதி முழுவதும் பணம் சுனாமியாக பாய்ந்தது. அங்கு பல இடங்களில் பண விநியோகம் நடைபெற்றது என்று செய்திகள் வெளியிட்டும் கூட அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
எப்படியாவது பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது மோடிதான். வாரணாசியில் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்த பிறகு இங்கு சூழ்நிலைகள் மாறின என்று சொல்வதை விட, அதற்கு முன்பிருந்தே வெற்றிபெற பல தில்லுமுல்லுகள் நடைபெற்றன. இவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் பற்றியும், பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றியை எதிர்த்தும் ஆதாரத்துடன் வழக்கு தொடரவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையில்லை என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளீர்கள். அப்படியென்றால் தமிழகத்தில் பெற்ற வெற்றி மீதும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்விக்கு, “மோடிக்கு தனிப்பட்ட முறையில் பன்னீர்செல்வம் மகன் மீது காதல். எனவே தேனி என்ற ஒரு தொகுதியில் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டனர். மற்ற தொகுதிகளில் எல்லாம் செய்தால் மாட்டிக்கொள்வோம். நமது காலில் விழுந்துகிடக்கும் பன்னீர்செல்வத்தின் மகனை மட்டும் காப்பாற்றிவிடலாம் என்று இவ்வாறு நடந்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதெல்லாம் மோடிக்கு இல்லாத காதல் பன்னீர்செல்வம் மகன் மீது மட்டும் ஏன் உள்ளது எனத் தெரியவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் தேனி தொகுதி விவிபாட் இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
**
[விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!](https://minnambalam.com/k/2019/05/26/29)
**
.
.
�,”