பத்து ரூபா கேப்பியா? சிசிடிவியில் சிக்கிய அரசியல்வாதியின் ஃபைட் சீன்!

Published On:

| By Balaji

மனைவியுடன் நைட் ஷோ சினிமா பார்க்க வந்த அமமுக ஒன்றிய செயலாளர், தியேட்டர் மேனஜரை கொடூரமாகத் தாக்கியதுடன், தியேட்டரையும் அடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் அமமுக ஒன்றிய செயலாளராகப் பணியாற்றுபவர் மில்லர். இவர் தனது மனைவியுடன் வடுகநாதன் தியேட்டருக்கு நைட் ஷோவில் சூர்யா நடித்த காப்பான் படம் பார்க்க சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் வந்த அவர் பத்து ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்த மறுத்து பைக்கைப் பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்தியுள்ளார். இதனைப்பார்த்த தியேட்டர் ஊழியர், பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு மில்லரை எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து திரையரங்க ஊழியர்கள் மற்றும் தியேட்டர் மேனேஜருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களை நோக்கி மிரட்டல் விடுத்தவர் மனைவியுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டார். திரைப்படம் முடிவதற்குள், அமமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பிரபு தலைமையில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்ராஜ், நிவேஷ், சூர்யா, சிவா, சந்தோஷ்குமார், கிருபாகரன், சோழமணி, அருண், ராம்ஜி, நட்ராஜ் ஆகியோர் தியேட்டருக்கு வந்தனர். அவர்களுடன் இணைந்து மில்லர் திரையரங்க மேலாளர் அலெக்சாண்டரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன் தியேட்டரில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அலெக்சாண்டரின் கை முறிவு ஏற்பட்டு, தலை, தோல்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல்துறையினர் அவரை மீட்டு அண்ணாமலைநகர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநேவ், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

தியேட்டரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்க்கும்போது திரையரங்க ஊழியர்கள் மற்றும் மேலாளர் தாக்கப்படுவதும், தியேட்டரை அடித்து நொறுக்கப் படுவதுமான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் அமமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மில்லர், நிவாஷ், அரவிந்ராஜ், கிருபாகரன், சந்தோஷ்குமார் ஆகியோரைக் காவலர்கள் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 7 பேரைக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணைய தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share