பத்திரிகையாளர்கள் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்கள்!

Published On:

| By Balaji

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 30) மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கும் வகையில்தான் இத்தகைய தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர் என்பது பாதுகாப்புப் படையினரின் குற்றச்சாட்டு.

”மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை 2009-10 ஆம் ஆண்டுகளில் மிகவும் வலிமையானவர்களாக இருந்தனர். ஆனால் 2018ல் சத்தீஸ்கரின் பஸ்தார் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறது. தற்போதைய நிலையில் மாவோயிஸ்டுகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றனர்” இப்படி கூறுகிறார் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட விஜயகுமார் (மே 24, 2018).

மத்திய அரசின் ஆலோசகர் விஜயகுமார் இப்படி தெரிவித்திருந்தாலும் சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் கைகள் ஓங்கித்தான் இருக்கின்றன என்பதை நேற்றைய (அக்டோபர் 30) தாக்குதல் வெளிப்படுத்தியிருக்கிறது. மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தாக்குவது வாடிக்கை.

**பத்திரிகையாளர்களுக்கு குறி**

ஆனால் தம்மை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் குறித்து ஒரு புறக்கணிப்பு நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலைப்பாட்டில் 2013-ல் மாற்றம் ஏற்படுகிறது. சத்தீஸ்கரின் பஸ்தான் பிராந்தியத்தில் நேமிசந்த் ஜெயின் மற்றும் சாய் ரெட்டி என்கிற இரு பத்திரிகையாளர்களை கொடூரமாக மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர்.

நேமிசந்த் ஜெயின் உள்ளூர் இந்தி நாளேடுகளின் செய்தியாளராக பணியாற்றினார்; சாய் ரெட்டியும் இந்தி பத்திரிகையாளர்தான். இருவரும் பத்திரிகையாளர்கள் போர்வையில் போலீஸ் உளவாளிகளாக செயல்பட்டனர் எனக் கூறி இப்படுகொலையை நியாயப்படுத்தியிருந்தனர் மாவோயிஸ்டுகள். இந்த நிலையில் மீண்டும் பத்திரிகையாளர் ஒருவரை தற்போது மாவோயிஸ்டுகள் படுகொலை செய்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர்களை ஏன் மாவோயிஸ்டுகள் குறி வைத்தனர்? என்ற கேள்விக்கு பதிலளித்த தண்டேவடா போலீஸ் அதிகாரி அபிஷேக் பல்லவ், கடந்த சில வாரங்களாக நாளிதழ்கள், டிவி சேனல்கள், நில்வயா என்ற கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டனர். 1998-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் இந்த கிராம மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஊடகத்தினரிடம் கிராம மக்கள் மனம்திறந்து பேசினர். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பகுதிக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டை மீறித்தான் ஊடகங்களிடம் கிராம மக்கள் பேசினர். அதனால் இம்முறை ஊடகத்தினரை மாவோயிஸ்டுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என விவரித்தார். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலைப் பதிவு செய்யும் முயற்சியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருக்கும் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் சென்ற பத்திரிகையாளர்களை இத்தாக்குதல் நிலைகுலைய வைத்திருக்கிறது.

**இதற்கு முன்னர் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர தாக்குதல்கள் விவரம்**

**55 போலீசார் பலி**

2007ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் ரானிபோடி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 55 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர்.

**15 பேர் பலி**

2008ஆம் ஆண்டு நயகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 போலீசார், பொதுமக்களில் ஒருவர் என 15 பேரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர்.

**கட்ச்ரோலி தாக்குதல்**

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி பகுதியில் 2009-ல் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 15 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர்.

**இந்தோ-திபெத் படையினர்**

2010-ல் சத்தீஸ்கர்-மகாராஷ்டிரா எல்லையில் கண்ணிவெடித் தாக்குதலில் இந்தோ- திபெத் படையினர் 3 பேர் பலியாகினர்.

**நாட்டை உறைய வைத்த தாக்குதல்**

2010- ஏப்ரலில் தண்டேவடா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் வீரமரணடைந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

**மேற்கு வங்கம்**

மேற்கு வங்கத்தின் சில்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 துணை ராணுவப் படையினர் படுகொலை செய்யப்பட்டனர்.

**கரியாபந்த்**

கரியாபந்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய இருவேறு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

**ஜார்க்கண்ட்**

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் 13 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர்.

**மாஜி அமைச்சர்கள் பலி**

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 2013-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 27 பேர் கொலை செய்யப்பட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share