�
பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பத்திரிகையாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர்கள் பலருக்கு குறைந்த ஊதியம் கிடைப்பதாகவும், அதிக நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதால், உடல் நலமும் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளியே கொண்டுவருவதால் சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் பத்திரிகையாளர் மட்டுமில்லாமல், அவர்களது குடும்பங்களும் பொருளாதார ரீதியில் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதுபோன்று தமிழகத்திலும் பத்திரிகையாளர்களின் நலன் காக்க, நல வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டுமெனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(மார்ச் 13) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றனர் நீதிபதிகள்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
�,