புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் உயிர்நீத்தனர். புல்வாமா தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்க இந்திய தரப்பு திட்டமிட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையருகே நேற்று (பிப்ரவரி 16) இந்திய விமானப் படையைச் சேர்ந்த 81 போர் விமானங்கள் ஒத்திகை பார்த்துள்ளன. இந்திய விமானப் படையைச் சேர்ந்த முக்கிய விமானங்களான மிராஜ் 2000, எம்ஐஜி 29, ஜாகுவார், சு30 ஆகியவை இந்த ஒத்திகையில் பங்கேற்றன.
இந்தியாவின் மேற்கு எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பொக்ரான் பகுதியில் ‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. தரையில் இருக்கும் இலக்குகளைக் குறிவைத்து தாக்குவது, எதிரிகளின் புகலிடத்தை முழுமையாக அழிப்பது போன்ற இந்திய விமானங்களின் திறன்கள் இந்த ஒத்திகையில் சோதனை செய்து பார்க்கப்பட்டன. புல்வாமா தாக்குதலையொட்டி வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் எல்லையோரத்தில் பாகிஸ்தானும் சுமார் 140 போர் விமானங்களுடன் எச்சரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படையின் தலைமை படைத் தளபதியான பி.எஸ் தனோவா பேசுகையில், “நமது அரசியல் தலைமையின் உத்தரவின் அடிப்படையில் தக்க பதிலடி கொடுப்பதற்கு இந்திய விமானப் படை தயாராகி வருகிறது. இரவு, பகல், கடும் குளிர், கடும் வெயில் என எல்லா சூழல்களிலும் கடுமையாக, குறிவைத்துத் தாக்கக்கூடிய நமது திறன்களை ஒத்திகை பார்த்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.�,