பண மோசடி: முன்னாள் அமைச்சர் மகனுக்கு ஏழு ஆண்டு சிறை!

Published On:

| By Balaji

திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். மேலும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி வசந்தி.

2016ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி நிறுவனங்கள் மூலம், மதிப்பழிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கே வெளிநாட்டு கரன்சியாக மாற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறைக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு தகவல் கிடைத்தது.

இதையடுத்து 2017 ஏப்ரல் மாதம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் எட்டு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்ற நிலையில், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் பெயர்களில் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, இலியாஸ் பீர் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லியாகத் அலி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போலி நிறுவனங்களுக்கான போலி ஆவணங்களை உருவாக்குவதில் மணி அன்பழகனுக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று மணி அன்பழகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தீர்ப்பளித்த சிறப்பு சிபிஐ, அமலாக்கத் துறை நீதிமன்ற நீதிபதி, “பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு போலி நிறுவனங்கள் மூலம் போலி ஆவணங்கள் மூலம் மாற்றியது அமலாக்கத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக அன்பழகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மணி அன்பழகன் ஒரு காலத்தில் தஞ்சை மண்டல திமுகவில் கோலோச்சிய, சோழமண்டலத் தளபதி என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் என்பதால், இந்த தண்டனை அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share