)
பண்டிகை சீசனில் உள்நாடு சில்லறை வாகன விற்பனை 11 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
வாகனப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்ட சில்லறை வர்த்தகத்தில் விற்பனையான வாகனங்கள் குறித்த விவரங்களை ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 20 வரையிலான பண்டிகை சீசனில் மொத்தம் 20,49,391 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 23,01,986 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதாவது பண்டிகைக் காலத்துக்கான வாகன விற்பனையில் 11 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் இந்த ஆண்டின் பண்டிகை சீசனில் மொத்தம் 2,87,717 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,33,456 ஆக இருந்தது.
இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரையில், பதிவுகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 18,11,703லிருந்து இந்த ஆண்டில் 2,87,717 ஆகக் குறைந்துள்ளது. இது 13 சதவிகித வீழ்ச்சியாகும். இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பின் தலைவரான ஆசிஷ் ஹர்ஸராஜ் காலே, *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்றதொரு மோசமான பண்டிகை சீசனை நாங்கள் கண்டதில்லை. இந்தப் பண்டிகை சீசனில் பல்வேறு காரணிகள் வாடிக்கையாளர்களின் வாகனம் வாங்கும் திறனைக் குறைத்துவிட்டன. அதிக எரிபொருள் விலை, காப்பீட்டுத் தொகை போன்ற காரணிகளும் அதில் அடங்கும்” என்று கூறியுள்ளார்.�,