ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மக்களவைத் தேர்தல் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு, “டஜன் கணக்கான தேர்தல்கள் பண்டிகை நேரத்தில் நடந்துள்ளன” என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று (மார்ச் 11) கூறியுள்ளார்.
நாட்டின் 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கிடையே, இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் நோன்பு மே 5ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஆம் தேதி நோன்பு தொடங்கும் பட்சத்தில் ஒரு மாதத்துக்கு நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு ஜூன் 6ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும்.
எனவே, ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் மாதத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இஸ்லாமியர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து தேர்தல் தேதிகளை அறிவித்திருக்க வேண்டுமெனச் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். “மாதத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பதால் மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவது பொதுமக்களுக்கு வசதியற்றதாக இருக்கும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடந்தால் குறைந்தபட்ச முஸ்லிம்கள் மட்டுமே வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “டஜன் கணக்கான தேர்தல்கள் பண்டிகைக் காலத்தில் நடந்துள்ளன. கடந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை நடந்த சமயத்தில் மே 28ஆம் தேதிதான் கைரானா மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் ஹோலி பண்டிகையும் சேர்ந்தே வருகிறது. எனவே ரம்ஜான் பண்டிகையைத் தேர்தல் பாதிக்கும் என்று கூற வேண்டாம்” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், “இந்தியாவை யார் வகுப்புவாதப் பிரிவுகளாகப் பிரிக்க விரும்புகிறார்களோ, அவர்கள்தான் இதுபோன்ற சர்ச்சையை உருவாக்குகிறார்கள். தேர்தல் சமயத்தில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியும்தான் வருகிறது. தங்கள் வேலையை விட்டுவிட்டு இறை வழிபாடு செய்ய வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. ஆனால், எதிர்பாராவிதமாகத் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுகிறது” என்றார்.
மதுரையில் சித்திரைத் திருநாளை முன்னிட்டு தேர்தல் நடத்தப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,