தேனி மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார் அங்கு பணிபுரியும் ஒரு துணை ஆய்வாளர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் மதனகலா. தைரியமாக நடவடிக்கை எடுப்பார். எப்படிப்பட்ட ரவுடிகளையும் ஒடுக்குவார் என்று காவல் துறை வட்டாரத்தில் பெயர் பெற்றவர். கோவை மத்தியச் சிறை பெண் அதிகாரி, தேனி மாவட்ட ஆட்சியரை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை ஸ்கெட்ச் போட்டு வளைத்துச் சிறையில் தள்ளியவர். நேற்று (மார்ச் 12) இவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு துணை ஆய்வாளர்.
தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அசோக். இவரது புகார் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் ஆய்வாளர் மதனகலா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பிரிவுகள் 506, 354(பி), 323, 324, 324(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.
இதன் பின்னணி குறித்து விசாரணையில் இறங்கினோம். வழக்கறிஞர் அசோக்கை காவல் நிலையத்தில் சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாகத் திட்டினீர்களா என்று ஆய்வாளர் மதனகலாவிடம் கேட்டோம். “பட்டாளம்மன் கோயில் தெருவில் அசோக் வசித்து வருகிறார். என் பிள்ளைகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று அசோக்கின் தந்தை குமார் அடிக்கடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தார். கடந்த மாதம் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என் மகன் கொடுமையால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தைக் கைப்பற்றி, குமார் எழுதிய கடிதங்களையும் எடுத்துவந்து, அசோக் மீது வழக்குப் பதிவு செய்தோம். ஒரு நாள் காவல் நிலையத்திற்குக் குடிபோதையில் வந்து என்னிடம் பேசினார் அசோக். அப்போது, அவரது தம்பி கார்த்திக் என்னைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரினார். நிருபரான இவர் பேசிய உரையாடல் பதிவு என்னிடம் உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, தாமரைக்குளத்தைச் சேர்ந்த பரமன், கணேசன், செல்வம் ஆகியோரது நிலம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் தர அசோக் உள்ளிட்ட சிலர் வந்தனர். இது சிவில் மேட்டர் என்று அனுப்பிவிட்டேன். மற்றபடி காவல் நிலையத்தில் எந்தச் சண்டையும் நடக்கவில்லை. ஆனால், அசோக் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி விரிவான விளக்கம் கொடுத்தேன். இந்த நிலையில், என் மீது காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி, நீதிமன்றத்தை நாடி என் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றுள்ளார் அசோக். இது என் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு மற்றும் தடுப்புச் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் சிலர்” என்று ஆதங்கத்துடன் பேசினார் மதனகலா.
இந்த வழக்கு தென்கரை பகுதி மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.�,