பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் விதை நெல் கூட வாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டனர் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளதாக ஆங்கில நாளேடான தி இந்து தகவல் வெளியிட்டுள்ளது.
2016 நவம்பர் 8 ஆம் தேதி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்க இந்தியா முழுதும் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்று பிரதமர் விளக்கம் அளித்தாலும் நாட்டின் பெரும்பாலான மக்களை இந்த பணமதிப்பழிப்பு கடுமையாக பாதித்தது.
இந்த நிலையில் இரு வருடங்களுக்குப் பிறகு, ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது மிகப் பெரிய தவறு’ என்று மத்திய அரசின் ஓர் அமைச்சகமே அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது தி இந்து.
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த செவ்வாயன்று அதன் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் பணமதிப்பழிப்பு திட்டத்தின் விளைவுகள் பற்றி மத்திய வேளாண் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய வேளாண் அமைச்சகம் அளித்துள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் உள்ளதாக சில விஷயங்களை தி இந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.
“இந்திய விவசாயிகள் காரிப் பருவ பயிர்களை அறுவடை செய்து விற்பதற்கும், ராபி பயிருக்கான விதைப்பிற்கும் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் பணமதிப்பழிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த இரு நடவடிக்கைகளுக்குமே பெருமளவிலான பணம் தேவை. ஆனால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகளின் இந்த இருபெரும் நடவடிக்கைகள் கடும் நெருக்கடிக்குள்ளாகின. விளைந்த பயிரை விற்க முடியவில்லை, அடுத்த கட்டமான சாகுபடிக்கு விதை கூட வாங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல மிகப்பெரிய நிலச் சுவான் தாரர்கள் கூட தங்கள் வயல்களில் வேலை செய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இந்திய அரசின் அமைப்பான தேசிய விதைக் கழகம் மூலமாகக் கூட திட்டமிட்டபடி 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை விவசாயிகளிடம் விற்க முடியவில்லை” என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் இருப்பதாக இந்து நாளேடு தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் அடியாழத்தில் ஊடுருவியுள்ள ஊழலை ஒழித்து அனைத்து பணத்தையும் வங்கி முறைக்குக் கொண்டுவருவதற்காகவே பணமதிப்பழிப்பு என்ற மருந்தைக் கொடுத்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள் என்று மத்திய அரசின் முக்கிய அமைச்சகமான வேளாண் அமைச்சகமே எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்கும் தகவல் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நேரத்தில் வெளியாகியிருக்கிறது.�,