மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.வலையபட்டி கிராம அங்கன்வாடியில் பட்டியலினப் பெண்கள் உணவு வழங்கக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது ஆட்சியர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
கடந்த ஜூன் 3ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். இதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.வலையபட்டியில் அதே ஊரைச் சேர்ந்த 2 பட்டியலினப் பெண்கள் அங்கன்வாடி சமையலராகவும் உதவியாளராகவும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு அடுத்தநாள், இருவரும் பணியில் சேர்ந்தனர்.
ஆனால், வலையபட்டியைச் சேர்ந்த ஊர் மக்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இவர்களை மாற்றும்வரை அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர். அதேபோல, ஒரு குழந்தை கூட அங்கன்வாடிக்கு வரவில்லை. இதனால், கடந்த ஒரு வார காலமாக அப்பெண்கள் சமைத்த உணவு வீணாகிப் போனது. இது பற்றி தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மலர்விழி விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, பட்டியலினப் பெண்கள் இருவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்தார் மதுரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார். ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து, இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது மாநில மனித உரிமைகள் ஆணையம்.
கிராம மக்களில் சிலரது நெருக்கடிக்குப் பயந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம். இது பற்றி ஜூலை 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன்.
மனித உரிமையை மீறி இரு பணியாளர்களையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
�,”