சென்னை பல்கலைக்கழகம் பட்டப் படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடிக்க, படிப்புகாலம் முடிந்து இரண்டாண்டு காலக்கெடு விதித்துள்ளது.
தற்போதுள்ள, பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பை முடிக்க எந்தவித காலக்கெடும் இல்லை. ஆனால், இனிமேல் அனைத்துப் படிப்பையும் படிப்புக்காலம் முடிந்த இரண்டாண்டுக்குள் முடிக்க வேண்டும் என விதிமுறையைச் சென்னை பல்கலைக்கழகம் விதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இரண்டு வருட படிப்புகள் நான்கு ஆண்டுகளிலும், மூன்று ஆண்டு படிப்புகள் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கூடுதலாக ஓராண்டு வழங்கப்படும். இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இனிமேல் மாணவர்கள் தங்கள் படிப்புகளை முடிக்கக் காலவரையற்ற காலத்தை எடுக்க முடியாது. இது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஒரு மாணவர் முதுகலை படிப்பை முடிக்க 10 ஆண்டுகள் ஆன சம்பவங்களும் நடந்திருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு பான்-ஆப்பிரிக்க மின்-கற்றல் திட்டத்தை பல்கலைக்கழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இது இந்திய மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும். மேலும், எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி படிப்புக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேராசிரியர் அதிகபட்சமாக எட்டு மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும். இணை பேராசிரியர் ஆறு மாணவர்களுக்கும், உதவி பேராசிரியர்கள் நான்கு மாணவர்களுக்கும் வழிகாட்ட முடியும். ஆனால், தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் 10 மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் ஆய்வு தரம் குறைகிறது. இதற்காகவே, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குச் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கி 160 ஆண்டுகள் ஆனதற்கான கொண்டாதடத்தை ஆரம்பிக்கும். அதன் சாதனைகள் வெளிப்படுத்தப் பல கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,