படைப்பாளிகளுக்கு பணம் கொடுக்கும் கூகுள், ஃபேஸ்புக்!

Published On:

| By Balaji

கூகுள், ஃபேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களில் அந்நிறுவனங்களால் உருவாக்கப்படாத படைப்புகள் ஏராளம். உதாரணமாக, பாடல்கள், காணொளிகள், செய்திகள், கட்டுரைகள் போன்றவை கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியானாலும் அப்படைப்புகளை கூகுள் நிறுவனம் படைப்பதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காப்புரிமை விதிகளின்படி, கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியாகும் படைப்புகளை உண்மையாகவே உருவாக்கியவருக்கு அந்நிறுவனங்கள் உரிய தொகையை வழங்க வேண்டும். இதன் விளைவாக, பாடல்கள், காணொளிகள், செய்திக் கட்டுரைகள் போன்றவற்றை உருவாக்குவோர் இனி பணம் கேட்டு கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களிடம் உரிமை கோரலாம்.

கலைஞர்களும், இசையமைப்பாளர்களும் இந்நிறுவனங்களுக்கு அனுமதி/உரிமம் வழங்க மறுத்தால், அவர்களது படைப்புகளை ஆன்லைன் நிறுவனங்கள் நீக்கிவிட வேண்டும். அதேபோல செய்திகள், செய்திக் கட்டுரைகளை வெளியிடுவோரிடம் உரிமம் குறித்து ஆன்லைன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு செய்தியை வெளியிட்டவர் அச்செய்திக்கான உரிமத்தை வழங்காவிட்டால் அந்த செய்தியை கூகுள் போன்ற நிறுவனங்கள் தலைப்புச் செய்திகளின் பட்டியலில் பயன்படுத்தமுடியாது.

இந்த புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் சங்கத்தின் பொது இயக்குநரான வெரோனிக் டெஸ்ரோஸஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைத் துறையின் மதிப்பை உறிஞ்சிக்கொண்டிருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் கலைஞர்களுக்கு உரிய பணத்தை வழங்குவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளால் படைப்பாளிகளுக்கு நியாயமான பண உதவி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share