கடல் தாண்டி, மலை தாண்டி மொழி தெரியாத பெரும்பான்மைக்கிடையே ஒரு திரைப்படம் திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும் எழுந்தவர்கள், வெளியே செல்லும் வழியைப் பார்க்காமல் ஒரே டெசிபலில் கைதட்டல்களைக் கொடுக்கிறார்கள். படத்தைத் திரையிட்டவர்கள் பெருமையுடன் கை கூப்பி பாராட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் நியூயார்க். நிகழ்ச்சி – நியூயார்க் இந்திய திரைப்பட விழா. படம் – ‘ஒரு கிடாயின் கருணை மனு’.
சனிக்கிழமை (6.5.17) இரவு 09.30 மணிக்குத் திரையிடப்பட்ட இந்தப் படம்தான் அன்றைய நாளின் கடைசி திரைப்படம். நாள் முழுவதும் படம் பார்த்த பலரும் அயர்ச்சியுடன் இருந்த நிலையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது இந்தத் திரைப்படம். படம் பார்த்தவர்கள் சொன்ன ஒருமித்த கருத்து, **இந்த மாதிரியான படங்களை அதிக அளவில் எடுங்கள். இந்திய சினிமா வளரும்** என்பதுதான்.
சப்-டைட்டில் இல்லாமலேயே தமிழில் படத்தைப் புரிந்துகொண்டவர்கள் சொன்னது, “இந்த மாதிரியான படங்களை டபுள்-மீனிங் வசனங்கள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இல்லாமல் பாரம்பர்யம் பேசும் படங்களை எடுத்தால், எங்கள் குழந்தைகளுக்கும் அவற்றை நாங்கள் எளிதாகக்காட்டி புரியவைப்போம்** என்று சொல்லியிருக்கின்றனர்.
அப்படி என்னதான் பேசியிருக்கிறது படம். நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவின் இணையதளத்தில், படம் பற்றிய சிறு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ராமமூர்த்தி – சீதா ஆகியோர் புது திருமண தம்பதிகள். அவர்களது பாட்டியின் வேண்டுதலின்படி, வீட்டில் வளர்த்துவந்த கிடாவைக் குலதெய்வம் கோயிலில் பலி கொடுக்க வேண்டும். சுற்றம் சூழ அதற்காக வேனில் கிளம்பிச்செல்லும் இவர்கள், ஓர் இளைஞனின் மீது வண்டியை ஏற்றிக் கொன்றுவிடுகிறார்கள். அந்த விபத்தைப் பார்த்த சாட்சியம் ஏதும் இல்லாததால், உடலை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவதா? போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பதா? ஏற்கெனவே ஓர் உயிர் எடுக்கப்பட்டுவிட்டதால், கிடாவைப் பலி கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதுதான் நகைச்சுவை கலந்த விறுவிறு திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.
தமிழகத்தில் ரிலீஸாகி வசூல் வேட்டை செய்வதற்கு முன்பு, திரைப்பட விழாக்களிலும், விருது விழாக்களிலும் பாராட்டை அறுவடை செய்யக் கிளம்பியிருக்கிறது இந்த கிடா.
[ஒரு கிடாயின் கருணை மனு டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=EOQD4-xeAOQ)�,”