திருப்பூர் பின்னலாடை மற்றும் ஜவுளி தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்தது. இது தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்ற போதும் பஞ்சு பதுக்கலைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள், “விசைத்தறி காடா துணி உற்பத்தியைப் பொறுத்தவரை, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பின், பாவு நூல்கள் தடையின்றி கிடைத்து வருகின்றன. வரி ரத்து நடவடிக்கை காரணமாக வெளிநாட்டு இறக்குமதி பஞ்சின் விலை குறையும் என்பதால் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
அதனால் சில நாட்கள் உற்பத்தி பாதிப்புகள் ஏற்படலாம். பின் நிலைமை சீராகும் என்றனர். பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்ததை வரவேற்கிறோம். இதனுடைய தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது ஓரிரு மாதங்களுக்குப் பிறகே தெரியும். தற்காலிகமாக பஞ்சு ஏற்றுமதி மற்றும் பதுக்கலை நிறுத்த வேண்டும்.
தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உள்நாட்டு பஞ்சு விலை அதிகம் உள்ளதால் வெளிநாட்டினரும் அதே விலைக்கு விற்பனை செய்ய யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள டீசல் விலை உயர்வு, விலைவாசி, கூலி உள்ளிட்டவற்றால் தொழிலை நடத்த இயலாத நிலை உள்ளது. பஞ்சு பதுக்கலை முழுமையாக தடுத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜவுளி தொழிலைக் காப்பாற்ற முடியும்” என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
**-ராஜ்-**
.