நதிகளை மாசுபடுத்தியதற்காக, பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.
சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நான்கு நதிகளுடன் ஜெனாப் நதியும் பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்றன. இவற்றில் பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளை மாசுபடுத்தியதாக, பஞ்சாப் மாநில அரசின் மீது புகார் எழுந்தது. சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால், பஞ்சாப் மாநிலத்திலுள்ள பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகள் மாசுவடைந்ததாகவும், இதனால் நதியிலுள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும் கூறப்பட்டது. நதிகளில் மிதக்கும் இறந்த மீன்களின் புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து, இந்நதிகளைப் பாதுகாக்கக் கோரி பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகினர்.
இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட மனுவின் விசாரணை, நேற்று (நவம்பர் 14) பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. மனுதாரர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து கருத்துகளைக் கேட்டது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நதிகள் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று, நீதிபதி ஜவாத் ரஹீம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நதிகளை மாசுபடுத்தியதற்காக அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கம் ரூ.50 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி, இதற்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.�,