இந்த வாரத்தில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் இடங்களைக் காலி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகன்ற மற்றும் நீளமான பக்கிங்ஹாம் கால்வாயை அமைக்க வேண்டுமென்ற நோக்கில், அதன் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டது தமிழகப் பொதுப்பணித் துறை. இதில் 66 இடங்களில் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் இந்த ஆக்கிரமிப்புகள் பெருகிவருவதால் இவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உதாரணமாக, சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை ஒட்டி, அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் வேளச்சேரியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களில் சிலர் மீண்டும் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். தற்போது அப்பகுதியிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரைப்பகுதியில் சுமார் 300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்போர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, மெட்ரோ குடிநீர், நீர்வளத் துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகியன பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு நதிகளில் உள்ள மாசுபாடு குறித்து தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன் ஒருபகுதியாக, தற்போது பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியிருக்கும் 66 ஆக்கிரமிப்பு பகுதிகள் காலி செய்யபடவுள்ளது. இதற்கு சில குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல கூவத்தை ஒட்டிய 15 பகுதிகளில் வசிக்கும் 6ஆயிரம் குடும்பத்தினரும், அடையாறை ஒட்டிய 12 பகுதிகளில் வசிக்கும் 4ஆயிரம் குடும்பத்தினரும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.�,