பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படத்தில் முன்னாள் இந்தி கதாநாயகியான டிம்பிள் கபாடியா இணைந்துள்ளார்.
தி டார்க் நைட், இன்செப்ஷன், இண்டெர்ஸ்டெல்லார் போன்ற ஹாலிவுட் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனவர் கிறிஸ்டோபர் நோலன். அடுத்ததாக இவர் இயக்கும் ‘டெனெட்’ என்ற படம் சர்வதேச உளவு நிறுவனங்களைப் பற்றிய ஆக்ஷன் கதையாக உருவாகவுள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் படமாகவுள்ள டெனெட் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் நேற்று முன்தினம் (மே 22) வெளியாகியது.
80களின் பாலிவுட் படங்களில் கனவுக் கன்னியாக வலம்வந்தவர் டிம்பிள் கபாடியா. பாபி மற்றும் சாகர் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்தி ரசிகர்களின் ஆதர்சமான நடிகையானார். தமிழில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இளவரசியாக நடித்தவரும் இவரே. கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெல்கம் பேக் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது கிறிஸ்டோபர் நோலன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் டிம்பிள் கபாடியா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராபர்ட் பேட்டர்ஸன், மைக்கேல் கேய்ன் போன்ற முன்னணி ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளனர். 2020ஆம் ஆண்டு, ஜூலை 17 அன்று வெளியாகும் இந்தப் படம் ஐமேக்ஸ் திரையில் கண்டுகளிப்பதற்கு ஏற்றார் போல 70 எம்எம் படச்சுருளில் படமாக்கப்படவுள்ளது.�,