ரமலான் மாதம் தொடங்கி இருப்பதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். தமிழகத்திலும் கடந்த ஞாயிறு முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். வழக்கமாகவே ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து மதத்தினரும் வாங்கி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சிகளை நடத்துவது, மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த வாலாஜா பள்ளியில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு திறக்க வரும் இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் உணவு, பழங்களை வழங்கி வருகின்றனர். திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த இப்தார் நிகழ்வில் பங்கேற்று நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறக்கின்றனர்.
அதிகாலையிலிருந்து அந்தி மாலை வரை தண்ணீர் கூட அருந்தாமல் களைப்புடன் வரும் இஸ்லாமியர்களுக்கு தேவையான பழங்கள், குளிர்பானங்களை கொடுத்து மனம் குளிர வைக்கின்றனர் இந்துக்கள். இஸ்லாமியர்களை போன்றே தலையில் தொப்பி அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் மசூதியில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் இந்துக்களை கண்டு இஸ்லாமியர்கள் மனம் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தெரிவிக்கையில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதியில் சகோதரத்துவத்தோடு உணவு, பழங்களை வழங்குவதாகக் கூறுகின்றனர்.
.