நேர்மையான அரசால் இந்த நாட்டை இயக்க இயலும் என்று கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் பாஜகவும், காங்கிரஸும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவால் நேரடி பிரச்சாரக் களங்களில் பங்கேற்க இயலாத சூழ்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இருக்கிறார். இதனால் மத்திய அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனைகளைப் பற்றி சமூக ஊடகங்களின் வாயிலாக எழுதி வருகிறார். இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும், ராகுல் காந்தியின் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் அறிவிப்பை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்றும் அருண் ஜேட்லி *தி எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேசியப் பாதுகாப்பை ஒட்டித்தான் பாஜகவின் தேர்தல் வியூகம் உள்ளதா என அவரிடம் கேட்டதற்கு, “தேசியப் பாதுகாப்பும் ஒரு முக்கியப் பிரச்சனை. நாங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்தோம். இதில் மோடி சிறிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார் என்றே கருதுகிறேன். பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினோம். பாலகோட் பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் ஆதரவும் இந்தியாவுக்கு இருந்தது.
தோல்வி பயத்தில் ஏ-சாட் ஏவுகணை சோதனை ரகசியங்களை வெளியிட்டோம் என்று ஒரு அற்புதமான அறிக்கையை ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார். அப்படியானால் அமெரிக்காவும், சீனாவும், ரஷ்யாவும் இந்த ரகசியங்களை வெளியிட அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நேர்மையான அரசை வழங்கியுள்ளோம். அது அவர்களுக்கு மற்றொரு பெரிய பிரச்சனை. ராகுல் காந்தி அறிவித்திருக்கிற குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டமான 72,000 ரூபாயை வழங்க இயலாது. ” என்றார்.
ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று ராகுராம் ராஜன் கூறியுள்ளாரே என்றதற்குப் பதிலளித்த அருண் ஜேட்லி, “அதுகுறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை” என்று கூறினார். பாஜக அரசு மிக வலுவாக இருப்பதாகவும், மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்த அருண் ஜேட்லி, பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை மற்றும் பிரச்சாரம் குறித்துக் கேட்கப்பட்டதற்கு, அதுகுறித்து கருத்து எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்ட நாடாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்ட அவர், “உலகின் மற்ற சில முக்கிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தத்தைக் கண்டபோதும், இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. ஜிஎஸ்டியில் வரிகளைக் குறைத்துள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் 100 விழுக்காடு மின்மயமாக்கல் இலக்கை எட்டிவிடுவோம். எல்லா கிராமங்களுக்கும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.�,