“நேரு குடும்பம் அல்லாதோர் யாரையாவது கட்சியின் தலைவராக நியமிப்பீர்களா?” என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு இரண்டாவது கட்டத் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சத்தீஸ்கரில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பணமதிப்பழிப்பு, ரபேல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்ப, பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகப்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை அமைதியான முறையில் வாஜ்பாய் பிரித்தார். இவை தற்போது வேகமாக வளரும் மாநிலங்களாக உள்ளன. ஆனால் தெலங்கானா மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்கியபோது நடந்த குழப்பங்களைப் பாருங்கள்.
நான் பிரதமர் பதவிக்கு வந்ததை அவர்கள் விரும்பவில்லை. டீ விற்றவர் எப்படி பிரதமராகலாம் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஒரு மகத்தான மனிதரால்தான் நான் பிரதமர் ஆனேன் என்று கூறுகின்றனர் ” என்று குறிப்பிட்டார்.
மேலும் காங்கிரஸுக்கு தான் சவால் விடுப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, “காங்கிரஸுக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத சில நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் . அவர்களை காங்கிரஸின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமிப்பார்களா? அப்படி நியமித்தால், உண்மையில் நேரு ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்கினார் என்று நான் ஒப்புக்கொள்வேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.�,