]
மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
நடப்பு 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடி வரியின் கீழ் வசூலிக்க மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. பின்னர், இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது இந்த இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த இலக்கை அடைவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மார்ச் 16ஆம் தேதி நிலவரப்படி, அரசின் நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வரி வசூலின் இறுதிக்கட்ட விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் வசூல் அளவு இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டுக்கான மறைமுக வரி வசூலில் இலக்கை அடைவது சற்றுக் கடினமாகவே இருக்கும் எனவும், நேரடி வசூல் இலக்கை அடைவது எளிதான ஒன்றுதான் எனவும் சுபாஷ் சந்திர கார்க் கூறுகிறார். இந்த ஆண்டுக்கான சுங்க வரி இலக்கையும் ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் ரூ.7.43 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.�,