நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று (ஏப்ரல் 6) காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், பாளையில் 8 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 3 மில்லி மீட்டரும், அம்பையில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
நெல்லையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) மதியம் வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மாநகரப் பகுதியில் தச்சநல்லூர், டவுன், பாளை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. ராதாபுரம் பகுதியில் கனமழை பெய்தது. அம்பை, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வீ.கே.புதூர், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. ஆய்குடி பகுதியில் அதிகபட்சமாக 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கடையநல்லூர், சிவகிரி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தூத்துக்குடியில் நேற்று முன்தினம் கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது, அதிகபட்சமாக கோவில்பட்டியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
தொடர்ந்து கோடை மழை பரவலாகப் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த கட்ட பயிரிடலுக்கான பணிகளைத் தொடங்கி உள்ளனர். கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
.