தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதற்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத் துறை செயலாளரான அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை உருவாக்கத்திற்காக தொலைத் தொடர்புத் துறை அமைத்துள்ள குழுக்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்தும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளரான அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் சில குழுக்களை அமைத்துள்ளோம். நிதித் துறை, விண்வெளித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை போன்றவற்றின் அமைச்சக கருத்துகளை பங்கேற்க வைப்பதற்காக சில குழுக்களின் அளவைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பெரும்பாலான குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. குழுக்கள் உடனடியாக பணிபுரியத் துவங்கிவிடும். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவதற்கு நிறைய ஸ்பெக்ட்ரம் தேவைப்படும். வருவாய் உயர்வு மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்ள முடியாது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஸ்பெக்ட்ரமின் விலையை 46 விழுக்காடு குறைப்பதற்கு டிராய் ஏற்கெனவே முன்மொழிந்துள்ளது. ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றால், குழுக்களின் பரிந்துரைகள் வந்த பிறகு கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.�,