நூற்றாண்டைத் தொட்ட அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள் ஆய்வு’

public

இந்தியச் சமூகம் ஏற்றத்தாழ்வுமிக்க, ஒரு முரண்பட்ட சமூகமாக இருப்பதில் சாதி அமைப்புக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. மக்களிடையே பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஏற்படுமானால் சாதி நீர்த்துப்போய் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக்கொண்டு, மேலும் இறுகி வலுப்பெற்று வந்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இப்படி, ஒரு சிக்கலான சமூக அமைப்பாக இருக்கும் சாதி அமைப்பு முறையைப்பற்றி ஆராயாமல் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், சாதிப் பிரச்னைகளையும் நம்மால் புரிந்துகொள்ளவோ அல்லது சாதியின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகளைத் தடுக்கவோ முடியாது. இங்கு சாதிகளைப்பற்றி சமூக அறிவியல் நோக்கில் தொடர்ச்சியான ஆய்வுகளோ அல்லது சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான செயல்திட்டங்களோ வகுக்கப்படவில்லை. இதன்காரணமாக நமக்கு சாதிப் பிரச்னையை அனுகும்போது, திசையறிய முடியாமல் குழப்பமே மிஞ்சுகிறது.

இந்தியாவில் சாதி அமைப்பு முறையைப் பற்றி ஆய்வுசெய்கிற எந்த ஒரு ஆய்வாளரும் அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு, சாதியைப் பற்றிய ஆய்வை தொடங்கவேமுடியாது. அவர் ஒரு மானுடவியல் ஆய்வாளர் என்ற கோணத்தில் இருந்தே சாதி அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பியக்கம் குறித்து ஆய்வுசெய்துள்ளார். அம்பேத்கர் தன்னுடைய 25வது வயதில் 1916ம் ஆண்டு, மே 9ம் தேதி நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த டாக்டர் ஏ.ஏ.கோல்டன்வைஸரின் மானுடவியல் கருத்தரங்கில், ‘இந்தியாவில் சாதிகள் அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி’ என்ற தனது ஆய்வுக் கட்டுரையை படித்தார். இந்த ஆய்வுக் கட்டுரை படிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அம்பேத்கரின் இந்த ஆய்வுக் கட்டுரை, சாதி அமைப்பைப் பற்றி விளங்கிக்கொள்ள ஆய்வாளர்களுக்கு ஒரு தொடக்கநிலை வழிகாட்டியாக இருக்கிறது. அது, அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவில் சாதிகள்பற்றி அம்பேத்கருக்குமுன்பே பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்திருந்தாலும் ஏன், அம்பேத்கரின் ஆய்வு முக்கியமானது என்றால் அதுவரை, சாதி என்பது இந்தியா என்ற ஒரு நாட்டில் உள்ள சமூக அமைப்பு. அது, மற்ற உலக நாடுகளைப் பாதிக்காது-என்றே மேலை ஆய்வாளர்கள் கருதி வந்தனர். அம்பேத்கர்தான் முதன்முதலில் சாதியை உலகளாவிய பிரச்னையாக முன்வைக்கிறார். அதை அவர், “சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல். ஆயினும், மிகப் பரந்தளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில், இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை, இந்துக்கள் கலப்புமனம் செய்ய மாட்டார்கள். அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குச் சென்றால் இந்தியச் சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்” என்று, அதன் ஆபத்தை எச்சரித்துள்ளார். இன்று வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இந்தியர்கள், அங்கேயும் தங்கள் சாதிகளை எடுத்துச்சென்று கடைவிரித்திருக்கிறார்கள்.

அவர் தனது ஆய்வில் முதலில் இந்திய மக்கள், ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே என்ற மானுடவியல் அறிஞர்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். அதேநேரத்தில், இவர்கள் அனைவரும் பன்னெடுங்காலத்துக்குமுன்னர் பலவகைப்பட்ட பண்பாடுகளோடு இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகள் என்று கூறுகிறார். இவர்கள் கலந்து பழகி, வாழ்ந்து ஒரு பொதுப் பண்பாடு உருவானது. ஆனாலும், பலவகை இன மக்களின் தனித்தனி பண்பாடு மறைந்து, ஒன்றுபட்ட ஒரே பண்பாடாக ஏற்பட்டுவிடவில்லை என்று தனது புரிதலை முன்வைக்கிறார்.

அம்பேத்கர், சாதிபற்றி இதற்குமுன்பு நடைபெற்ற ஆய்வுகளைக் கொண்டு தனது ஆய்வின் கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கிறார். அதற்காக, சாதிபற்றி அவருக்குமுன்பு ஆய்வுசெய்துள்ள செனார்ட், நெஸ்ஃபீல்டு, சர் ரிஸ்லி, கெட்கர் ஆகியோரின் ஆய்வுகளை விவாதிக்கிறார். அவர்களின் ஆய்வுக் கருத்துகள்மீது தனது விமர்சனத்தைக் கூறுகிறார். மேலும், இந்த ஆய்வாளர்களில், கெட்கரைத் தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் என்பதால் அவர்களுக்கு சாதிபற்றிய, மிக நுட்பமான பார்வைகள் இல்லை என்பது அவரது முடிபாக இருக்கிறது.

இந்தியாவில் நிலவும் சாதி அமைப்புமுறை பற்றி குறிப்பிடும்போது, “இந்தியச் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும், நாகரிகமற்றிருந்த பழங்காலத்துக்குரிய மிச்சசொச்ச சின்னங்கள் நிலவிவருவதைக் காணமுடியாது. அவை, பழமை வீரியத்துடன் இன்றளவும் இயங்கிவருகின்றன” என்று, சாதியின் உயிர்ப்புத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறார். அகமண வழக்கத்தின் அமைப்பியக்கமே சாதிக்கு வித்திட்டிருக்கிறது என்று கருதும் அவர், கணவன் இறந்துவிட்டால் பெண்கள் உடன்கட்டை ஏறுகிற ‘சதி’ வழக்கத்துக்கும் ஒரு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். அது, ஒரு சமூகக்குழுவில் ஆண்களின் எண்ணிக்கைக்கு இணையாக பெண்களின் எண்ணிக்கையையும் கொண்டிருப்பதன்மூலம், ஒரு குழுவில் கூடுதலாக இருக்கும் ஒரு பெண், தனக்கான இணையை வேறு குழுக்களில் தேர்ந்தெடுக்க முடியாமல் தடுக்கிறது. கணவனை இழந்த பெண்ணால் அந்தக் குழுவில் உள்ள மற்ற பெண்களுக்குப் போட்டியாக மாறாமல் இருப்பதற்காகவும் சதி என்ற கொடிய வழக்கம் அனுசரிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அப்படியும் கொல்லப்படமுடியாத பெண்களை, இந்தச் சமூகம் விதவை வாழ்க்கையை வாழ நிர்பந்தித்திருக்கிறது என்று, கணவனை இழந்த விதவைப்பெண்கள் அனுபவித்த விதவை வாழ்க்கை முறையைக் குறிப்பிடுகிறார்.

சமீப காலங்களில், சாதிகளின் உடைவுக்கு ஒரு காரணம் கண்கூடாகத் தெரிகிறது. அது, சாதிமாறிய காதல் திருமணம் என்றால் மிகையில்லை. இந்தியா தாராளமயக் கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கியபின்னர், பெண்களின் பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியது. இந்திய மத்தியதர வர்க்கம் குடும்பத்தைக் காப்பாற்ற உடல் உழைப்புத் திறன்கொண்ட ஆண் குழந்தை தேவை என்பதால் அவர்கள், பெண் குழந்தைகளை வரதட்சணை போன்ற காரணங்களுக்காக ஒரு சுமையாகக் கருதினார்கள். அதனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிமூலம் கருவிலேயே அது பெண் என்று கண்டறியப்பட்டால் அந்த சிசு கொலைசெய்யப்பட்டது. இப்படி நடைபெற்ற பெண் சிசுக்கொலை, உலகம் முழுவதும் நூறு மில்லியன் என்றால் அதில், இந்தியாவில் மட்டும் 40 சதவிகிதத்துக்கும்மேல். இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள சாதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்தது. அதுவும், இன்று சாதியைமீறி திருமணம் செய்துகொள்ளும் பெண்களை சாதி மீறிவிட்டால் என்பதோடு தொடர்பு உள்ளது. தங்கள் சாதிகளில் திருமணம் செய்துகொள்வதற்கு பெண்கள் இல்லை என்ற ஆத்திரம் சாதி உணர்வோடு வெளிப்படுவது தெரிகிறது.

தொடக்ககால மார்க்ஸியர்கள், இந்தியாவில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து, ‘அவை சமுக மேற்கட்டுமானங்கள். பொருளாதார வளர்ச்சியில் மாறிவிடும்’ என்று கூறினார்கள். ஆனால் அம்பேத்கர், ‘சாதியும் வர்க்கமும் அண்டைவீட்டுக்காரர்கள் மாதிரி. மிகச்சிறிய இடைவெளியே சாதியையும் வர்க்கத்தையும் பிரிக்கிறது. சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்’ என்றார். அதை யாரும் அவர் காலத்தில் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்போதும் முழுமனதோடுதான் கூறுகிறார்களா? என்பதும் ஐயமாக உள்ளது.

இந்தியாவில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நிலவுகிற சதுர்வர்ண சாதி அமைப்பு முறை எப்படி உருவானது என்று அம்பேத்கர் கூறும்போது, ‘ஏதோ ஒரு கட்டத்தில் சமூகத்தில் உயர்நிலையில் இருந்த பிராமணர்கள், தங்களை கதவடைப்பு செய்துகொண்டு தனித்து வாழ்கிறார்கள். இதுவே, சாதி உருவாகக் காரணமாக இருக்கிறது. பிராமணர்களிடம் புழங்குகிற சாதிகள் அவர்களைப் பார்த்து ஒழுகுதலின்மூலம் மற்றவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்’ என்று கூறுகிறார். மேலும், அவர் மனுதான் சாதியை உருவாக்கினார் என்று கூறவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே சாதி நிலவி வருகிறது. சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனு, தன்காலத்தில் இருந்த சாதிமுறை நல்லதெனக் கூறி, சாதிகளைத் தொகுத்து ஒரு தத்துவ விளக்கம் அளித்துவிட்டார் என்றே அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மேலும் அவர், பிராமணர்கள் சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றதே என்று கூறுவதோடு, பிராமணர்கள் பல வகைகளிலும் குற்றமிழைத்தவர்கள் என்று துணிந்து கூறுவேன் என்றும் கூறுகிறார்.

மேலும், சாதி அமைப்புமுறையை பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள்மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல; அதற்குரிய துணிவோ, ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது. ஆனால், பிராமணர்கள் தங்களின் நயமான தத்துவங்களின்மூலம் சாதி அமைப்புமுறை பரவுவதற்கு துணைபுரிந்திருக்கலாம். சாஸ்திரங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று கூறுகிறார். மேலும், சாதிகளின் தோற்றம்குறித்த அவரது கருத்தில் பார்த்து ஒழுகுதல், போலச் செய்தல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அம்பேத்கர் சாதிகளைப் பற்றிய ஆய்வைக் குறிப்பிடும்போது, ஒருதலை சார்பாக ஆய்வை நடத்திச்செல்வதைத் தவிர்க்க வேண்டும். அறிவியல் வழியை பின்பற்றிச் செல்லவேண்டிய இடத்தில் உணர்ச்சிவயப்படுதலைத் தவிர்த்து, நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மேலும் சாதிபற்றிய ஆய்வில் அவர், தன்னுடைய ஆய்வுதான் முடிவான முடிபு என்று கூறவில்லை. மாறாக, ‘என்னுடைய தத்துவங்கள் தவறு என்று தெரிந்தால், நான் அவற்றை அழித்துவிட ஆர்வம்காட்டத் தயங்கமாட்டேன். அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று எடுத்துக்காட்டினால் அவற்றை கைவிடத் தயங்கமாட்டேன்’ என்று தெரிவிப்பதோடு, சாதியை விளங்கிக்கொண்டு அதை அழித்தொழிப்பதற்குத் தயாராகவே இருந்தார். அம்பேத்கரின் முதல்நூலான ‘இந்தியாவில் சாதிகள் அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி’ என்ற நூல், அவரது 125வது பிறந்தநாள் விழாவில் நூற்றாண்டை அடைந்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரின் அடிப்படையான ஆய்வு முடிபுகள் இன்றும், சாதிபற்றிய சமூகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *