நீதிமன்ற உத்தரவை மீறி, வழக்கறிஞர்கள் குறித்து அவதூறு பரப்பிய ரங்கராஜன் நரசிம்மன் மீது வழக்கு தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிலைகள், புராதனப் பொருட்கள் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கோரி, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயில் திருப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், தங்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், கோயில் நிர்வாகிகள் சார்பில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் அவரிடம் அறிவுறுத்தினர்.
நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு, நேற்று (நவம்பர் 1) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கறிஞர்களுக்கு எதிராக அவதூறான, ஆபாசமான கருத்துகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருவதாக ரங்கராஜன் நரசிம்மன் மீது புகார் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், தான் அவதூறு கருத்துகள் எதையும் பதிவு செய்யவில்லை என்றும், பத்திரிகை செய்தியை மட்டுமே பகிர்ந்ததாகவும், அவதூறு எனக் கருதினால் நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் ரங்கராஜன் நரசிம்மன் அவதூறு கருத்தைப் பதிவிட்டிருந்தால், உரிய ஆதாரத்துடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.�,