“சட்டமன்றத்தில் நியாயம் இல்லை, நீதிமன்றத்திலும் இப்படிப்பட்ட நிலை, இனி மக்களைத்தான் நம்ப வேண்டும், மக்களைத்தான் நம்புகிறோம்’’ என்று தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் நேற்று (ஜூன் 16) இரவு திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார் ஸ்டாலின்.
கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்ட ஸ்டாலின் பின் தற்போதைய சட்டமன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி சில நிமிடங்கள் பேசினார்.
“ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்துக்கு சபாநாயகர் வந்ததும் இருக்கையில் அமர்வதற்கு முன் ஒரு திருக்குறள் வாசிப்பார். ஓரிரு தினம் முன்பு திமுக உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி பேசும்போது ஒரு திருக்குறளைப் பேசினார்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும்’ என்ற திருக்குறளைக் கூறிவிட்டு அதற்கான பொருளையும் கூறினார். சான்றோர்களின் அறிவுரையைக் கேட்காத அரசாங்கத்தை யாரும் கெடுக்க வேண்டியதில்லை, தானாகவே அழியும் என்று மாசிலாமணி சொல்ல, உடனே அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். திருக்குறளையே அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் ஆட்சிதான் இது.
சட்டமன்றம் ஒருமாதிரியாக இருப்பதால்தான் நாங்கள் மாதிரி சட்டமன்றம் நடத்தினோம். ஆனால், திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் எல்லாம் வேண்டுகோள் விடுத்ததால், அதை நாங்கள் கைவிட்டு அவைக்கு வந்தோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்தை மதித்து நாங்கள் சட்டமன்றத்துக்குத் திரும்பினோம்’’ என்றவர் அடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி பேச ஆரம்பித்தார்.
நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா என்று தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. பூவா, தலையா என்று காத்திருந்த நிலையிலே இரண்டுமில்லாமல் நடுக்குத்தாகத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இது நியாயமா? நான் கேட்கவில்லை, தமிழக மக்கள் கேட்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கும் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. அங்கே நியமன உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தது செல்லாது என்று சபாநாயகர் அறிவித்தார். விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? சபாநாயகர் வைத்தியலிங்கத்தின் அறிவிப்பு செல்லாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு சொன்னார்.
ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் தீர்ப்பில் தலையிட மாட்டோம் என்று அதே தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். இப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிலும் சபாநாயகர் தீர்ப்பில் தலையிட மாட்டோம் என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். இங்கே தலையிட மாட்டோம், பாண்டிச்சேரியில் தலையிடுவோம்.
நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அரசை எதிர்த்து ஓட்டுப் போட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று நாம் போட்ட வழக்கில் மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்து அடுத்த மாதமே ஏப்ரலில் தீர்ப்பை அளித்தார்கள்.
ஆனால் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஜனவரி மாதமே தீர்ப்பை ஒத்தி வைத்து ஏழு மாதங்கள் தாமதித்து, தீர்ப்பு இழுத்தடிக்கப்பட்டது ஏன்? பத்து மாதங்களாக 18 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. சட்டமன்றத்துக்கும் செல்ல முடியாது, தொகுதிக்கும் செல்ல முடியாது., மேம்பாட்டு நிதியையும் பயன்படுத்த முடியாது.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பளித்த பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், நேர்மையானவர் என்று பெயர் பெற்ற ஹரிபரந்தாமன் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அவர் திமுககாரர் அல்லர். எந்தக் கட்சியையும் சாராதவர். அவர் சொன்னதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்’’ என்று சொல்லி ஹரிபரந்தாமனின் கருத்தை முழுதாக வாசித்தார் ஸ்டாலின்.
அதில் இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கும், மோடிக்கும் ஆதரவாக இருக்கும் என்பதையும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என்பதையும் அழுத்தமாகவே வாசித்தார் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசியவர், “தலைமை நீதிபதியின் தீர்ப்பில்கூட ஒரு வரி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘18 ரிட் மனுதாரர்களும் எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எதிர்க்கட்சியோடு கூட்டணி வைப்பதாகச் சொல்வதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை’ என்று தலைமை நீதிபதியே தீர்ப்பில் குறிப்பிடுகிறார்.
நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில், ‘சபாநாயகர் உத்தரவில் இயற்கை நீதி இல்லை. அது வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. அந்த உத்தரவில் வக்கிரம் வெளிப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட நிலை. இனி யாரை நம்புவது? மக்களைத்தான் நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களையே நம்புகிறோம். விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி உதயமாகப் போகிறது. தயாராக இருங்கள்’’ என்று முடித்தார் ஸ்டாலின்.
ஒரு கட்சியின் செயல் தலைவர் என்பதோடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தின் மீது விமர்சனக் கணைகளை வீசியிருப்பது அரசியல் வட்டாரங்களிலும், நீதித்துறை வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.�,