பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரித் தொடரப்பட்ட மனு தொடர்பாக, வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென்று தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதியன்று இதனை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த வழக்குகளில் சிபிஐ நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார் வழக்கறிஞர் புகழேந்தி.
குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களைப் புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இன்று (மார்ச் 19) இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீவிரமான இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.
�,