நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது: மத்திய அரசு!

Published On:

| By Balaji

நீட் தேர்வில் இருந்து விலக்களித்து தமிழக அரசு கொண்டுவந்த இரண்டு மசோதாக்கள் 2017ஆம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் ஆகிய இரு சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் உள்ளிட்ட 4 தரப்புகளிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு கடந்த ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத், இந்த மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் குறித்து ஜூலை 16ஆம் தேதி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா இன்று அறிக்கை தாக்கல் செய்தார், அதில் ”2017 பிப்ரவரி 20ஆம் தேதி இம்மசோதா உள்துறை அமைச்சகத்துக்கு கிடைக்கப்பெற்றது. அன்றைய தினமே சட்டம் மற்றும் நீதி, சுகாதாரம், மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மூன்று துறை நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு 2017 செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 2017 செப்டம்பர் 18ஆம் தேதி இம்மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். பின்னர் 2017 செப்டம்பர் 22ஆம் தேதியே தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கு மீண்டும் நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக, ”நீட் மசோதா விவகாரத்தில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும் தகவலில் திருப்தி இல்லை. அவர் தவறான தகவலை அளிக்கிறார்” என்று கூறி சட்டமன்றத்திலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். ஆனால் நான் கூறும் தகவல் பொய்யாக இருந்தால் பதவி விலகத் தயார் என்று சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share