~நீட் தேர்வு: மாணவர்களுக்குக் குவியும் உதவிகள்!

Published On:

| By Balaji

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்வதாகப் பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதவுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது சிபிஎஸ்இ தரப்பு. அதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட வெளி மாநில மையங்களிலேயேதான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரம், மீத்தேன், நீட் என பல்வேறு விவகாரங்களில் தமிழக மக்களின் போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மற்ற மாநில மாணவர்களுக்குச் சொந்த மாநிலத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், போக்குவரத்துச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து நீட் தேர்வு தொடர்பாக சென்னைத் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), மாணவர்களின் இதர செலவினங்களுக்கு மாணவர் ஒருவருக்குத் தலா 1000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இதனை அவர்கள் கல்வி பயிலும் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்வு எழுதித் திரும்பிய பிறகும் உரிய ரசீதுகளைக் காட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர்**

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்திலுள்ள கீழ்க்காணும் தேர்வு மையங்களுக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு தேவைப்படுமெனில் தங்குமிட வசதியும், தேர்வு மையத்தைச் சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேவையான உதவியைப் பெறுவதற்கான தொலைபேசி எண்களையும் அமமுக அறிவித்துள்ளது. “ஆலப்புழா தேர்வு மைய எண் 5059, எர்ணாகுளம் – 5060, கன்னூர் – 5061, கோழிக்கோடு – 5064, மலப்புரம் – 5065, பாலக்காடு – 5066, திரிச்சூர் – 5067 ஆகிய தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் பொற்காலராஜா, ராகேஷ் ஆகியோரை 93631 09303, 99942 11705 என்ற எண்ணிலும், திருவனந்தபுரம்-5068, கொல்லம்-5062, கோட்டயம்-5063 ஆகிய இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் பாப்புலர் வி.முத்தையாவை 89034 55757, 73738 55503 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம்” என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். தொடர்புக்கு :9940738572,9092020923, 04365 _247788″ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” வெளி மாநிலத்திற்கு சென்று #NEET தேர்வு எழுதவுள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு 1000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். 8939129559 – ஜெ.அன்பழகன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று ஜெய்பூரிலுள்ள ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் உதவிக்கு திரு. முருகானந்தம் (9790783187), திருமதி. சௌந்தரவல்லி (8696922117), திரு. பாரதி (7357023549)என்ற தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே நடிகர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து அதுகுறித்த பதிவுகளைச் சமூக வலைதளங்களில் இட்டுவருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும்; வரும் 6ஆம் தேதி வரை இந்த கூடுதல் பேருந்து சேவை தொடரும் – அரசு விரைவு போக்குவரத்து கழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share