நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சி.பி.எஸ்.இ. மற்றும் தமிழக அரசு இன்று (ஜூன்,6) பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே இத்தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன்8 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து,நீட் தேர்வில் 4 தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகப் பாட நிபுணர்களும் தேர்வு எழுதிய மாணவர்களும் தெரிவித்தனர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், தவறான கேள்விகள் குறித்துச் சி.பி.எஸ்.இ. விளக்கமளித்தது. திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்கொடி நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளைக் கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பு வெளியானால், அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம். அதைக் கருத்தில் கொண்டு ஒரே தரத்தில் வெவ்வேறு வினாக்கள் கொண்ட 10 வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் 90.75 % மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மற்ற மொழிகளில் 9.25% மாணவர்கள் தேர்வு எழுதினர். எனவே, முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்தத் தடையால், ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கையும் பாதிக்கும் என சி.பி.எஸ்.இ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தேர்வு முடிவை அறிவிக்க 15 நாட்கள் தேவை எனத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தரப்பிலும் இன்று (ஜூன்,6)பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும். அதுவே அரசின் நோக்கம். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளது.�,