நீட் தேர்வு கொண்டுவரப்பட காரணமே திமுகவும் காங்கிரஸும்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக நேற்று விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (ஜூலை 11) மாலை மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நீட், எட்டுவழிச் சாலை, தங்கம் வரி உயர்வு உள்ளிட்ட பல கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த 2010ஆம் ஆண்டில்தான் இந்த நீட் தேர்வு குறித்த நோட்டிபிகேஷன் விடப்பட்டது. இதற்கு காரணமே காங்கிரஸும் திமுகவும்தான். மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் அந்த பழியை எங்கள் மீது சுமத்துவதற்காக குற்றச்சாட்டை திசைதிருப்பிவிடுகின்றனர். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்றார். அமமுக தேர்தலில் போட்டியிடமாட்டோம் என அறிவித்திருக்கிறதே என்ற கேள்விக்கு, “தேர்தல் முடிவுகள் வெளிவந்து தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று தினகரனே தெரிந்துகொண்டதால், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார்” என்று பதிலளித்தார்.
எட்டுவழிச் சாலைத் திட்டம் மாநில அரசின் திட்டமல்ல அது மத்திய அரசின் திட்டம். விவசாயிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது எனக் கருதிதான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தோம். இதன்மூலம் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இந்த சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படவில்லை. இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்றுதான் எதிர்க்கின்றனர் என்று குற்றம்சாட்டிய முதல்வர், “அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப் படுகொலைகள் நடக்கிறது. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “தங்கத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தங்கம் மீதான வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள். ஏனெனில் தங்கம் வாங்கும் அளவுக்கு வசதி இருப்பவர்கள்தான் தங்கத்தையே வாங்குகிறார்கள். அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில்தான் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுவருகின்றன” என்று குறிப்பிட்டார்.�,