நீட் தேர்வை எதிர்த்து ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வான நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள், குறிப்பாகக் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பாதிப்படைவார்கள் என்று கூறி தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தன. தமிழக அரசு கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை
அதனால், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை எதிர்த்தும், இதுதொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கக் கோரியும், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஜூலை 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் [ஆர்ப்பாட்டம்]( https://www.minnambalam.com/k/2017/07/12/1499797833) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறிவித்தபடி ஜூலை 12-ஆம் தேதி(இன்று) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், காதர் மொய்தீன், சுப.வீரபாண்டியன், ஜவாஹிருல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கோவை, கடலூர், நாமக்கல், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “மத்திய கல்வி அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறுகின்றனர். அவர்கள் அப்படித் தெரிவிப்பதற்கு காரணம் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதுதான் காரணம்” என்று அவர் தெரிவித்தார். அதன் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழகத்தில் நீட் தேர்விற்கு சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித் தாள்கள் தயார் செய்கிறார்கள். இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக உள்ளது. இனிவரும் காலங்களில் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டங்களாக மாற்றப்படும் என்று முதல்வரும் கல்வி அமைச்சரும் அறிவிக்கின்றனர், இதனால் மாநில பாடத்திட்டம் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றார்.
இதைதொடர்ந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கலைஞர் மற்றும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மத்திய அமைச்சர்கள் தலைமைச் செயலகம் உள்ளே வந்தது கிடையாது. ஆனால் தற்போது தலைமைச் செயலகத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழைகிறார்கள். மேலும், தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை” என்று அவர் தெரிவித்தார்.�,