நீட் ஆள் மாறாட்டம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

Published On:

| By Balaji

நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி நேற்று (செப்டம்பர் 23) உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது, தேனி மருத்துவக் கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில் க.விலக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உதித் சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதித் சூர்யாவைப் பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். தனிப்படையினர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே உதித் சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (செப்டம்பர் 24) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ஆள் மாறாட்டம் விவகாரத்தில் அம்மாணவர் பயின்ற பயிற்சி மையம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் கைமாறி இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் சில உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share