நீட் ஆள்மாறாட்ட சந்தேகம்: தேசிய தகுதித் தேர்வு முகமைக்குக் கடிதம்!

Published On:

| By Balaji

உண்மைத் தன்மை உறுதியாகும் வரை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்களின் மருத்துவ கல்விக்கான பதிவு உறுதிப்படுத்தப்படாது என எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததைத் தொடர்ந்து, அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் சிபிசிஐடி போலீசார் இன்று (செப்டம்பர் 26) விசாரணை நடத்தினர். தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் அக்கல்லூரி டீன் ராஜேந்திரன் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதற்கிடையே கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இரு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த அக்கல்லூரி டீன் ராமலிங்கம், மாணவர்களின் நீட் ஹால் டிக்கெட் புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வெவ்வேறாக இருப்பதாக (possible mismatch) விசாரணைக் குழு நடத்திய சோதனையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக மாணவர்கள் சென்னை சென்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

முறைகேடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மாணவர் மற்றும் மாணவி இருவரும் இன்று காலை சென்னை மருத்துக் கல்லூரி இயக்குநரகத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்தனர். ஆனால் ஆவணங்கள் சரிபார்ப்பு நாளையும் தொடரும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன், நீட் ஆள்மாறாட்டம் செய்ததாகச் சந்தேகம் எழுந்துள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்விக்கான பதிவு எண் உண்மைத்தன்மை உறுதி செய்யும் வரை வழங்கப்படாது. இதனால் அவர்களால் தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்தார்.

”மாணவர் சேர்க்கையில் என்ன நடந்தது என்பது தெரியாது. மாணவர்கள் சேர்க்கையில் பல்கலைக் கழகம் நேரடியாகத் தலையிடாது. தேர்வுக் குழுதான் மாணவர்களைச் சேர்க்கிறது. பிஎஸ்ஜி கல்லூரியிலிருந்து எங்களுக்கு ரிப்போர்ட் வந்தது. அதில் இரு மாணவர்களின் புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறுமாதிரியாக இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர வேறு எந்த ஆவணமும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. ரிப்போர்ட் வந்ததைத் தொடர்ந்து பிஎஸ்ஜி கல்லூரிக்கு விரிவான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

“மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தப் பிறகு அவர்களுக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் என்று பதிவு எண் கொடுத்து அங்கீகரிக்கப்படுவார்கள். தற்போது கல்லூரிகளில் சேர்க்கை நடந்து முடிந்துள்ள நிலையில் நவம்பர் அல்லது டிசம்பரில் பதிவு எண் கொடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும். இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது குளறுபடி இருந்தால் பதிவெண் வழங்கப்படாது. பதிவெண் வழங்கப்படாத மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்த வகையில் பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் சான்றிதழ்களில் எந்த சந்தேகமும் இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னரே பதிவெண் வழங்கப்படும்” என்று சுதா சேஷைய்யன் கூறினார்.

பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி விவகாரத்தைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி இயக்குநர், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழு மற்றும் சுகாதாரத் துறை செயலாளர், தேசிய தகுதித் தேர்வு முகமை ஆகியவற்றிடம் தெளிவான விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share