கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், தங்குமிடம் போன்றவை இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள், தன்னார்வல அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
ஒரு சில தனியார் நிறுவன பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை கட்டணம் வசூலிக்காமல் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்து வருகின்றன. தமிழக அரசு பேருந்தில் நிவாரணப் பொருட்கள் அனுப்ப முதலில் கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், கட்டணம் இன்றி நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.
இந்நிலையில், ரயில்களில் எடுத்துச் செல்லும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 23) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கஜா புயல் தமிழகத்தின் 12 மாவட்டங்களைத் தாக்கியதில், கடலோர 4 மாவட்டங்கள் முழுமையாக பேரழிவை சந்தித்துள்ளன. மற்ற மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு ரயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.�,